கூட்டுறவு பணி நியமனத்தில் அலட்சியம்; தமிழக அரசு மீது அண்ணாமலை காட்டம்
கூட்டுறவு பணி நியமனத்தில் அலட்சியம்; தமிழக அரசு மீது அண்ணாமலை காட்டம்
UPDATED : பிப் 24, 2026 04:02 PM
ADDED : பிப் 24, 2026 01:40 PM

சென்னை: கூட்டுறவுத் துறையில் வேலைக்கு பல இளைஞர்கள் தேர்வெழுதிக் காத்துக் கொண்டிருக்கையில், அதைக் குறித்து எந்தக் கவலையுமின்றி அலட்சிய மனோபாவத்தில் திமுக இருப்பதாக தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டி உள்ளார்.
அவரது அறிக்கை: கூட்டுறவுத் துறையில் மாநில மற்றும் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையங்கள் சார்பாக, கடந்த அக்டோபர் மாதம் நடத்தப்பட்ட தேர்வுகளின் இறுதி பட்டியல், 100 நாட்கள் கடந்தும் வெளியிடப்படாமல் இருப்பதால், கீழ்ப்பாக்கம் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அலுவலகம் முன்பாக, தேர்வுகள் எழுதிய இளைஞர்கள் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
கூட்டுறவுத் துறையில், மாநில அளவிலான தேர்வில், 327 பணியிடங்களிலிருந்து 267 ஆக குறைத்து துரோகம் செய்ததோடு மட்டுமல்லாமல், மாவட்ட அளவிலான 2314 பணியிடங்களுக்காக, பல ஆயிரக்கணக்கான இளைஞர்கள் நம்பிக்கையோடு தேர்வெழுதிக் காத்துக் கொண்டிருக்கையில், அதைக் குறித்து எந்தக் கவலையுமின்றி அலட்சிய மனோபாவத்தில் இருக்கும் திமுக அரசுக்கு, வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இன்று நடைபெறும் அமைதியான அறப்போராட்டம், வெறும் கோரிக்கை மட்டுமல்ல, பல குடும்பங்களின் நியாயத்திற்கான குரல். தகுதியான இளைஞர்களின் எதிர்காலத்தை தாமதப்படுத்தாமல், உடனடியாக இறுதி தேர்வு பட்டியலை வெளியிட வேண்டுமென்றும், கைது செய்யப்பட்ட தேர்வர்களை உடனடியாக விடுவிக்க வேண்டுமென்றும் திமுக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.

