தேர்தல் வருவதால் திமுகவிற்கு நடுக்கம் வந்துவிட்டது: நயினார் நாகேந்திரன்
தேர்தல் வருவதால் திமுகவிற்கு நடுக்கம் வந்துவிட்டது: நயினார் நாகேந்திரன்
ADDED : ஜன 26, 2026 02:46 PM

திருநெல்வேலி: கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழக முதல்வர் முழுக்க முழுக்க பொய்யான தகவல்களை வழங்கி வருகிறார். தேர்தல் வருவதால் திமுகவிற்கு பயமும், நடுக்கமும் வந்துவிட்டது என தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலியில் நிருபர்களிடம் நயினார் நாகேந்திரன் கூறியதாவது: அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள். ஊடக நண்பர்கள் என்னை பார்க்கும் போதெல்லாம் ஏளனமாக சில கேள்விகளை எழுப்புவர். கூட்டணி எல்லாம் பிரிந்து பிரிந்து செல்கிறார்களே, உங்களை விட்டு போய்க் கொண்டே இருக்கிறார்களே?
எப்படி வலுவான கூட்டணியை அமைப்பீர்கள்? என்று கேட்டுக் கொண்டே இருப்பர். இதற்கு 23ம் தேதி பதில் கிடைத்துவிட்டது. சென்னையில் பிரதமர் மோடி பங்கேற்பதற்காக பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தோம். ஆனால் அது மாநாடாகவே அமைந்துவிட்டது. இதுவரை எந்த அரசியல் கட்சியும் நடத்தாத அளவுக்கு இந்த கூட்டம் நடத்தப்பட்டுள்ளது.
தே.ஜ கூட்டணி
இந்த மாநாட்டில் சுமார் 5 லட்சம் பேர் பங்கேற்றார்கள். நிச்சயமாக உறுதியாக தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும். தேமுதிக மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியின் ராமதாஸ் அணி எங்களது தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைவது தொடர்பாக ஒரு வார காலத்துக்குள் பதில் கிடைக்கும்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழக முதல்வர் முழுக்க முழுக்க பொய்யான தகவல்களை வழங்கி வருகிறார். தேர்தல் வருவதால் திமுகவிற்கு பயமும், நடுக்கமும் வந்துவிட்டது. பழைய பென்ஷன் திட்டம் அமல்படுத்துவேன் என்று வாக்குறுதி கொடுத்துவிட்டு, அரசு ஊழியர்களை ஏமாற்றி விட்டார். இதன் மூலமாக அவர் அரசு ஊழியர்களுக்கு திருநெல்வேலி அல்வாவை கொடுத்துள்ளார்.
எனது விருப்பம்
யாரையும் யாருக்கும் அடிமையாக வைக்கக்கூடிய கட்சி பாஜ இல்லை. அனைவரும் சுதந்திரமாக செயல்படலாம். தமிழக வெற்றிக்கழகத்தில் எத்தனை மாவட்ட செயலாளர்கள் இருக்கிறார்கள் என்பது கூட அதன் தலைவருக்கு தெரியாது. விஜய்க்கு பாஜ எந்த அழுத்தமும் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. திமுகவை ஆட்சியை விட்டு அகற்ற வேண்டும் என ஒற்றை எண்ணத்தில் இருக்கிறோம்.
அனைத்து கட்சிகளும் ஒரே குடைக்குள் வர வேண்டும் என்பதே எனது விருப்பம். அந்த வகையில் தான் டி.டி.வி தினகரனும் எங்கள் கூட்டணிக்கு வந்துள்ளார். அரசியலில் நிரந்தர நண்பரும் இல்லை. நிரந்தர எதிரியும் இல்லை என்று முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியே சொல்லி இருக்கிறார். இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறினார்.

