ஊடகவியலாளர்களின் குரல்வளையை நெரிக்கும் திமுக; நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு
ஊடகவியலாளர்களின் குரல்வளையை நெரிக்கும் திமுக; நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு
ADDED : டிச 10, 2025 07:45 PM

சென்னை: திமுக அரசின் ஊழல்களை, அத்துமீறல்களை அம்பலப்படுத்தும் ஊடகவியலாளர்களின் குரல்வளையை நெரிக்கும் போக்கை திமுக அரசு கைவிடுவதாக தெரியவில்லை என தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.
அவரது அறிக்கை: திமுக அரசின் ஊழல்களை, அத்துமீறல்களை அம்பலப்படுத்தும் ஊடகவியலாளர்களின் குரல்வளையை நெரிக்கும் போக்கை திமுக அரசு கைவிடுவதாக தெரியவில்லை. ஏற்கனவே, ஒரு வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கபட்டிருக்கும் ஒரு ஊடகவியலாளரின் மேல் பதியப்பட்டிருக்கும் முதல் தகவல் அறிக்கையில், தற்போது ஊடகவியலாளர் சவுக்கு சங்கரின் பெயரை போலீசார் இடைச்செருகலாக இணைத்திருப்பதாக அறிகிறேன்.
தொடர்ந்து திமுக அரசின் தகிடுதத்தங்களை பொதுவெளியில் தனது சவுக்கு மீடியா மூலம் உரக்கப் பேசி வரும் சவுக்கு சங்கரை கைது செய்து முடக்குவதற்காகவே இந்த வேலையை போலீசார் செய்துள்ளனர். இதை நான் கண்டிக்கிறேன்.
தேர்தல் வரும் முன் தங்களுக்கு எதிரான அனைத்து ஜனநாயக குரல்களையும் இந்த அரசு முடக்கிவிடலாம் என நினைக்கலாம். ஜனநாயக களத்தில் மக்கள் அனைத்தையும் கவனித்துக்கொண்டிருக்கிறார்கள்.
இந்த தேர்தலோடு திமுகவை வேரோடும் வேரடி மண்ணோடும் பிடுங்கி எறிய மக்கள் முடிவெடுத்துவிட்டனர் என்பதே நிதர்சனம். இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

