விஜய் கட்சியை எதிர்கொள்ள வேலு நாச்சியாருக்கு சிலை; விறுவிறுப்பாக களம் இறங்கிய தி.மு.க., தலைமை
விஜய் கட்சியை எதிர்கொள்ள வேலு நாச்சியாருக்கு சிலை; விறுவிறுப்பாக களம் இறங்கிய தி.மு.க., தலைமை
ADDED : செப் 17, 2025 04:16 AM

சென்னை : நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் துவங்கியதும், 'அக்கட்சி குறித்தும், நடிகர் விஜய் குறித்தும் யாரும் பெரிதாக எதுவும் பேச வேண்டாம்; அக்கட்சி எப்படி செயல்படுகிறது? அக்கட்சிக்கான மக்கள் ரியாக்ஷன் எல்லாம் பார்த்து விட்டு, அதன் பின், அக்கட்சி குறித்துப் பேசலாம்' என, தி.மு.க., தலைமையிடம் இருந்து, கட்சியின் நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவிக்கப் பட்டிருந்தது.
அதனால், அக்கட்சிக் குறித்து பேசுவதை, தி.மு.க., தலைவர்களும், நிர்வாகிகளும் தொடர்ந்து தவிர்த்து வந்தனர். இதற்கிடையில், கடந்த சில மாதங்களுக்கு முன் விக்கிரவாண்டியிலும், அதற்குப் பின், மதுரையிலும் த.வெ.க., நடத்திய மாநில மாநாடுகளுக்கு பெரிய அளவில் கட்சியினர் திரண்டனர்.
கூடவே, தமிழகத்தில் தி.மு.க.,வுக்கும் த.வெ.க.,வுக்கும் இடையே தான் போட்டியென நடிகர் விஜய் அறிவித்தார். அதன் பின்பும், தி.மு.க., தரப்பு அமைதியாகவே இருந்தது.
கடந்த சில நாட்களுக்கு முன், வரும் சட்டசபை தேர்தலுக்காக, திருச்சியில் தன்னுடைய பிரசாரத்தை நடிகர் விஜய் துவங்கினார். பிரசாரத்தில் தி.மு.க., அரசை கடுமையாக விமர்சித்தார். அந்த பிரசாரத்துக்கு, மிகப் பெரிய அளவில் திரண்ட கூட்டத்தை பார்த்து, ஆளும் தி.மு.க., உள்ளிட்ட அனைத்து கட்சியினரும் அதிர்ந்து போய் உள்ளனர்.
இதனால், வெகு நாட்கள் அமைதி காத்த தி.மு.க., தரப்பு, நடிகர் விஜய் மற்றும் த.வெ.க., குறித்து விமர்னம் செய்யத் துவங்கி உள்ளது. கூடவே, த.வெ.க.,வை தேர்தல் களத்தில் எப்படி எதிர்கொள்வது என்பது குறித்த தீவிர ஆலோசனையிலும் உள்ளது.
த.வெ.க., தரப்புக்கு வரும் தேர்தலில் பெரிய அளவில் ஓட்டுக்கள் செல்லாமல் இருக்க, பல தரப்பு மக்களைக் கவரவும், பல்வேறு திட்டங்கள் தி.மு.க.,வால் தீட்டப்பட்டுள்ளன.
அந்த வகையில் தான், முதல் கட்டமாக, சுதந்திர போராட்ட வீராங்கனை வேலு நாச்சியாரின் சிலையை, சென்னை கிண்டி காந்தி மண்டபத்தில், அரசு சார்பில் வரும் 19ம் தேதி திறக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நடிகர் விஜயின் த.வெ.க., கொள்கை தலைவராக வேலு நாச்சியார் அறிவிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே சட்டசபையில் வேலு நாச்சியார் சிலை அமைப்பது குறித்து முதல்வர் அறிவிப்பு வெளியிட்டிருந்தாலும், அவசர அவசரமாக சிலையை திறப்பதன் பின்னணியில் விஜய் கட்சி இருப்பதாகவே, அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசுகின்றனர்.