ஆட்சிக்கு வருவதற்காக பொய் சொல்லும் தி.மு.க.,: இ.பி.எஸ்., தாக்கு
ஆட்சிக்கு வருவதற்காக பொய் சொல்லும் தி.மு.க.,: இ.பி.எஸ்., தாக்கு
ADDED : நவ 29, 2024 06:23 PM

சேலம்: '' ஆட்சிக்கு வர வேண்டும் என்பதற்காக தி.மு.க., எந்த பொய்யை வேண்டுமானாலும் சொல்லும்,'' என அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமி கூறியுள்ளார்.
சேலத்தில் நிருபர்களை சந்தித்த பழனிசாமி கூறியதாவது: டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசுக்கு தி.மு.க., அரசு தான் கடிதம் எழுதி உள்ளது. இது குறித்த செய்தி பத்திரிகையில் வந்துள்ளது. தற்போது ரத்து செய்யக்கோரி கடிதம் எழுதுவதாக முதல்வர் ஸ்டாலின் நாடகம் அரங்கேற்றி உள்ளார். சுரங்கம் அமைக்க அனுமதி கோரியதே தி.மு.க., அரசு தான்.
தமிழகத்தில் தினமும் கொலை, கொள்ளை, வழிப்பறி, பாலியல் துன்புறுத்தல் ஆகியன நடந்து கொண்டுள்ளன. தி.மு.க., அரசு அதனை கண்டு கொள்ளவில்லை. சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாகி உள்ளது. அடியோடு சீர்கெட்டு உள்ளது.வணிகர்களுக்கு வரிமேல் வரி போட்டு பாதிக்கச் செய்வது வேதனை அளிக்கிறது. இதனை குறைக்க மத்திய அரசை மாநில அரசு வலியுறுத்த வேண்டும். நாகையில் வெள்ளநீரால் பாதிக்கப்பட்ட பயிர்களை கண்டறிந்து விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு பழனிசாமி அளித்த பதிலில் கூறியதாவது: அ.தி.மு.க., ஆட்சி இருக்கும் வரை சொத்து வரி உயரவில்லை. ஆட்சி மாற்றம் ஏற்பட்ட உடன், உயர்த்திவிட்டு எங்கள் மீது பழிபோடுகின்றனர். எதற்கு எடுத்தாலும் மத்திய அரசை எதிர்க்கிறோம் என்கின்றனர். மத்திய அமைச்சரை அழைத்து விழா நடத்துகிறார்கள். சொத்து வரி உயர்வினால் மக்கள் பாதிக்கப்படும்போது, போராட்டம் நடத்தினீர்களா? அல்லது பார்லிமென்டில் குரல் எழுப்பினீர்களா? எங்கள் மீது பழிபோட்டு தப்பிக்க பார்க்கின்றனர். ஆட்சி அதிகாரம் அவர்களிடம் தான் உள்ளது. சொத்து வரி ஏறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஏற்றியதை குறைக்க வேண்டும்.
தேர்தல் அறிக்கையில் சொத்து வரி உயர்த்தப்படாது என்றனர். தி.மு.க.,வின் பொய் வாக்குறுதியை நம்பி மக்கள் ஓட்டுப் போட்டனர். அதனால் அவர்கள் ஆட்சியில் உள்ளனர். ஆட்சிக்கு வர எந்த பொய்யை வேண்டும் ஆனாலும் சொல்வார்கள். ஆட்சிக்கு வந்த பிறகு தேர்தல் அறிக்கையை மறந்து மக்களை சமாதானப்படுத்த முயற்சி செய்வது கண்டிக்கத்தக்கது.
வேளாண் துறை மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. எனவே பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என மாநில அரசு சட்டம் இயற்றலாம். நான் முதல்வராக இருந்த போது டெல்டா மாவட்டங்களில் எந்த திட்டமும் கொண்டு வரப்படவில்லை. முல்லைப் பெரியாறு அணையை பலப்படுத்தும் பணியை தி.மு.க., அரசு கிடப்பில் போட்டு உள்ளது. தி.மு.க.,வில் தான் கூட்டணி கட்சிகளுக்கு பணம் கொடுக்கப்படுகிறது. இதனைத்தான் திண்டுக்கல் சீனிவாசன் குறிப்பிட்டார்.
அதிமுக ஆரோக்கியமான கட்சி. தி.மு.க., மாதிரி அடிமைக் கட்சி கிடையாது. சுதந்திரமாக செயல்படும் கட்சி. இங்கு வாரிசு அரசியலுக்கு இடமில்லை. யார் உழைக்கிறார்களோ அவர்களுக்கு வாய்ப்பு உண்டு. இடமுண்டு. ஆலோசனை கூட்டம் என்பது கருத்துகளை பரிமாறிக் கொள்வதற்கு. இது உதயநிதிக்கு தெரியாது. அவர் தற்போது தான் அரசியலுக்கு வந்தார். உடனே எம்.எல்.ஏ., அமைச்சர், துணை முதல்வர் ஆகிவிட்டார். அவர் குறித்து இன்னும் சொல்லலாம். அவராக புரிந்து கொண்டு நடந்தால் நல்லது. இவ்வாறு இ.பி.எஸ்., கூறினார்.

