திமுக எம்எல்ஏ கருணாநிதி மகன் ஆன்ட்ரோ, மருமகள் மார்லினா ஜாமின் மனு தள்ளுபடி
திமுக எம்எல்ஏ கருணாநிதி மகன் ஆன்ட்ரோ, மருமகள் மார்லினா ஜாமின் மனு தள்ளுபடி
ADDED : பிப் 06, 2024 05:28 PM

சென்னை: 18 வயது பட்டியலின பெண்ணை துன்புறுத்திய தி.மு.க., எம்.எல்.ஏ., கருணாநிதியின் மகன் ஆன்ட்ரோ மற்றும் மருமகள் மார்லினாவின் ஜாமின் மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
சென்னை பல்லாவரம் தொகுதி தி.மு.க., எம்.எல்.ஏ., கருணாநிதியின் மகன் வீட்டில், 18 வயது பட்டியல் இன சமூகத்தைச் சேர்ந்த இளம்பெண் வேலை செய்து வந்துள்ளார். எம்.எல்.ஏ., மகன் ஆன்ட்ரோ,35 மற்றும் மருமகள் மார்லினா, 31, ஆகியோரால் கடுமையாக தாக்கப்பட்டும், சிகரெட்டால் சூடு வைக்கப்பட்டும் துன்புறுத்தப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமி பேசும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. திமுக எம்எல்ஏ மகன், மருமகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்தன.
இதனையடுத்து வீட்டு வேலைக்கு வந்த பெண்ணை கொடுமைப்படுத்தியதாக பல்லாவரம் எம்எல்ஏ.,வின் மகன் ஆன்ட்ரோ, அவருடைய மனைவி மார்லினா மீது எஸ்.சி., எஸ்.டி வன்கொடுமை சட்ட பிரிவு உள்ளிட்ட 5 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இருவரும் தலைமறைவானார்கள். அவர்களை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.
ஆன்ட்ரோ மற்றும் மார்லினா இருவரும் ஜாமின் கேட்டு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கில் போலீசார் தாக்கல் செய்த பதில் மனுவில், ‛‛ விசாரணை ஆரம்ப கட்ட நிலையில் உள்ளது. ஜாமின் வழங்கினால் விசாரணை பாதிக்கப்படும்'' எனக்கூறியிருந்தனர்.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, ‛‛ தற்போதைய நிலையில் ஜாமின் வழங்க முடியாது'' எனக்கூறி, ஆன்ட்ரோ மற்றும் மார்லினாவின் ஜாமின் மனுவை, தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

