எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் அறிவிக்கப்படாத 'எமர்ஜென்சி' நிலை தி.மு.க., மா.செ.,க்கள் கூட்டத்தில் தீர்மானம்
எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் அறிவிக்கப்படாத 'எமர்ஜென்சி' நிலை தி.மு.க., மா.செ.,க்கள் கூட்டத்தில் தீர்மானம்
ADDED : மே 04, 2025 12:24 AM

சென்னை:எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில், அறிவிக்கப்படாத 'எமர்ஜென்சி' நிலையை மத்திய பா.ஜ., அரசு உருவாக்கி வருவதாக, தி.மு.க., மாவட்ட செயலர்கள் கூட்டத்தில், தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தி.மு.க., மாவட்ட செயலர்கள் கூட்டம், சென்னை அறிவாலயத்தில், நேற்று காலை நடந்தது.
தி.மு.க., தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் தலைமையில் நடந்த கூட்டத்தில், பொதுச்செயலர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மை செயலர் நேரு, துணைப் பொதுச்செயலர்கள் ஐ.பெரியசாமி, கனிமொழி, ஆ.ராஜா, திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த அப்பாவி மக்களுக்கும், கத்தோலிக்க திருச்சபை தலைவர் போப் பிரான்சிஸ் மறைவுக்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
பின், நான்காண்டு கால தி.மு.க., அரசின் சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பது குறித்தும், சட்டசபை தேர்தலுக்கான ஆயத்த பணிகள் குறித்தும், கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
இதையடுத்து, நான்கு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அதன் விபரம்:
ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்தும் பொறுப்பு, மத்திய அரசிடம் தான் உள்ளது என்பதை உணர்த்தி, இப்போது ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிவிப்பை முதல்வர் ஸ்டாலின் பெற்றிருக்கிறார். சட்டம் இயற்றும் அதிகாரம் சட்டசபைக்கே, கவர்னருக்கு இல்லை என, வரலாற்றுச் சிறப்புமிக்க உச்ச நீதின்ற தீர்ப்பை பெற்று, அனைத்து மாநிலங்களுக்குமான உரிமைகளை பெற்றுத் தந்திருக்கிறார்.
மாநில சுயாட்சிக்காக உயர்மட்ட குழு அமைத்துள்ளார். இதற்காக, முதல்வர் ஸ்டாலினை பாராட்டுகிறோம்.
எமர்ஜென்சி
நீதித்துறை உள்ளிட்ட அனைத்து தன்னாட்சி அமைப்புகளின் செயல்பாடுகளிலும் அத்துமீறி குறுக்கிட்டு, அந்த அமைப்புகளின் சுதந்திரத்தை பறித்து வருவதோடு, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் மட்டும் வருமான வரித்துறை, அமலாக்கத்துறை சோதனைக்கு இலக்காகும் வகையில், அறிவிக்கப்படாத நெருக்கடி நிலையை மத்திய பா.ஜ., அரசு உருவாக்கி வருகிறது.
அ.தி.மு.க.. போன்ற கட்சிகளை மிரட்டி, கூட்டணி அமைக்க, மத்திய பா.ஜ., அரசு, விசாரணை அமைப்புகளை ஈடுபடுத்தி வருகிறது.
தி.மு.க.,வினரை பழிவாங்கும் நடவடிக்கைக்காக, அமலாக்கத்துறை போன்ற அமைப்புகளை, மத்திய பா.ஜ., அரசு பயன்படுத்துவதை, சட்டத்தின் துணை கொண்டு தி.மு.க., எதிர்கொள்ளும்.
முதல்வர் ஸ்டாலின் சொன்னபடி, அமித் ஷா அல்ல, எந்த ஷாவந்தாலும், எத்தனை பரிவாரங்களை சேர்த்துக் கொண்டு வந்தாலும், அதை எதிர்த்து, நீதியை நிலைநாட்டவும், மக்கள் மன்றத்தில், மத்திய பா.ஜ., அரசின் அத்துமீறலை எடுத்துரைக்கவும், இந்தக் கூட்டம் தீர்மானிக்கிறது.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.