'சஸ்பெண்ட்' ஆகாத தி.மு.க., - எம்.பி.,க்கள்: அ.தி.மு.க., சந்தேகம்
'சஸ்பெண்ட்' ஆகாத தி.மு.க., - எம்.பி.,க்கள்: அ.தி.மு.க., சந்தேகம்
UPDATED : பிப் 05, 2026 05:28 AM
ADDED : பிப் 05, 2026 01:15 AM

சென்னை: 'லோக்சபாவில், பா.ஜ.,வை எதிர்த்து சஸ்பெண்ட் ஆன எம்.பி.,க்களின் பட்டியலில் தி.மு.க.,வினர் யாரும் இல்லாதது ஏன்' என, அ.தி.மு.க., - எம்.பி., இன்பதுரை சந்தேகம் எழுப்பியுள்ளார்.
லோக்சபாவில் நேற்று முன்தினம், ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தில், சீன ஆக்கிரமிப்பு குறித்து எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் பேசினார். அதற்கு சபாநாயகர் அனுமதி மறுக்கவே, காங்கிரஸ் உள்ளிட்ட 'இண்டி' கூட்டணி கட்சி எம்.பி.,க்கள் அமளியில் ஈடுபட்டனர்.
அதைத் தொடர்ந்து, எட்டு எம்.பி.,க்கள் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர். அதில் தி.மு.க., - எம்.பி.,க்கள் யாரும் இல்லை.
இது தொடர்பாக, அ.தி.மு.க., - எம்.பி., இன்பதுரை வெளியிட்ட பதிவில், 'பார்லிமென்டில் காங்கிரசுக்கு ஆதரவாக சலங்கை கட்டி ஆடுவதில், எப்போதும் தி.மு.க., முன்னிலை வகிக்கும்.
'நேற்று முன்தினம் ராகுலுக்கு ஆதரவாக போர்க்கோலம் பூண்டு நின்று, தமிழகத்தைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி., வெங்கடேசன் உள்ளிட்ட இண்டி கூட்டணியைச் சேர்ந்த எட்டு எம்.பி.,க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். 'ஆனால், அந்தப் பட்டியலில் தி.மு.க., - எம்.பி., ஒருவர் கூட இல்லையே அது ஏன்?' என கேள்வி எழுப்பியுள்ளார்.

