திமுக., வினரே திமுக., வை தோற்கடிப்பார்கள் : பா.ஜ., விமர்சனம்
திமுக., வினரே திமுக., வை தோற்கடிப்பார்கள் : பா.ஜ., விமர்சனம்
ADDED : டிச 16, 2025 02:52 PM

திருப்பரங்குன்றம் தீபம் தொடர்பான விவகாரத்தில் அளும் திமுக., அரசை விமர்சித்துள்ளார் தமிழக பாஜக செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ் பிரசாத். ‛சனாதன தர்மத்திற்கு எதிரான திமுகவின் போக்குக்கு திமுகவினரே திமுகவை தோற்கடிப்பார்கள் என தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை :
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற தனி நீதிபதி சுவாமிநாதன் உத்தரவிட்டதை எதிர்த்து திருப்பரங்குன்றம் கோவில் செயல் அலுவலர், மாவட்ட ஆட்சியர் ஆகியோர் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்களை நீதிபதிகள் ஜி ஜெயச்சந்திரன் மற்றும் நீதிபதி கே.கே. ராமகிருஷ்ணன் கொண்ட அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழக அரசு சார்பில் கோவில் அருகே தர்கா உள்ளது. இதனால் திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற கோவில் நிர்வாகம் தான் அனுமதி வழங்க வேண்டும். திருப்பரங்குன்றம் மலையில் உள்ளது தீபத்தூண் என்பதற்கு ஆதாரம் இல்லை என்று உண்மைக்கு புறம்பாக உள்நோக்கத்துடன், வரலாற்றைத் திரித்து தமிழக அரசு வாதம் வைத்துள்ளது.
இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் தரப்பில் வாதிட்ட மூத்த வழக்கறிஞர் என். ஜோதி இந்து மதத்தின் நம்பிக்கையும், சனாதன தர்மத்தையும் அவமதிக்கும் வகையில், தமிழ் கடவுள் முருகனையும் திருப்பரங்குன்றம் வழிபாட்டு உரிமையையும் கொச்சைப்படுத்தும் வகையில் முருகனுக்கு இரண்டு மனைவிகள் இருந்தாலும், தீபம் இரண்டு இடத்தில் ஏற்றப்பட முடியாது. ஒரு இடத்தில் மட்டுமே தீபம் ஏற்றப்பட வேண்டும் என்பது மரபு என்றும் எல்லைகளை கடந்து அரசியலமைப்பின் சட்டத்திற்கு எதிராக இந்து மத கடவுளை இழிவுபடுத்தும் வகையில் விமர்சித்துள்ளார்.
மேலும் இரவு நேரங்களில் வெளிச்சத்துக்காக இந்தத் தூண்களைப் பயன்படுத்தினர். இந்தக் கம்பங்கள் கார்த்திகை தீபத்திற்காக அல்ல, மாறாக முனிவர்கள் பயன்படுத்திய தனிப்பட்ட வெளிச்சத்துக்காகவே உருவாக்கப்பட்டவை என்று பொய் பிரச்சாரங்கள் ஆதாரமில்லாமல் முன்வைக்கப்பட்டுள்ளன.
நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை வைத்து திருப்பரங்குன்றம் முருக பக்தர்கள், ஆன்மிக அன்பர்கள், சட்டப்படி உரிமை போராட்டத்தில் நடத்தும் பொழுது, தமிழக அரசு சனாதன தர்மத்திற்கு எதிராக, இந்து மத கோட்பாடுகளை கொச்சைப்படுத்தும் வகையில், இந்து மத கடவுள்களை இழிவு படுத்தும் வகையில், இந்து மத நம்பிக்கைகளை சிதைக்கும் வகையில் செயல்படுவது கடும் கண்டனத்துக்குரியது.
இந்து சமய அறநிலைத்துறை சார்பாக ஆஜரான வழக்கறிஞர் தமிழ் கடவுள் முருகனை அவமதிக்கும் வகையில் உதாரணப்படுத்திக் கூறிய மோசமான கீர்த்தரமான சிந்தனை கருத்துகளுக்கு, துறையின் அமைச்சர் சேகர்பாபு தார்மீக பொறுப்பேற்று தமிழக மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.
முதல்வர் ஸ்டாலின் மற்றும் திமுக கட்சி தலைவர்கள் தொடர்ந்து சனாதன தர்மத்தையும் இந்து மதத்தையும் இந்து கடவுள்களையும் கொச்சைப்படுத்தும் விவகாரத்தில் தமிழக மக்கள் கொதித்துப் போய் உள்ளனர். தமிழக மக்களோடு இணைந்து வருகின்ற தேர்தலில் திமுக கட்சியினரே இங்கு விரோத மக்கள், விரோத திமுகவை தோற்கடித்து தகுந்த பாடத்தை கற்றுக் கொடுப்பார்கள்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.

