மின்வாரிய ஊழியர்கள் மீது தி.மு.க.,வினர் தாக்குதல்: நடவடிக்கை எடுக்காதது ஏன்; அண்ணாமலை கேள்வி
மின்வாரிய ஊழியர்கள் மீது தி.மு.க.,வினர் தாக்குதல்: நடவடிக்கை எடுக்காதது ஏன்; அண்ணாமலை கேள்வி
ADDED : ஏப் 21, 2025 03:07 PM

சென்னை: மின்வாரிய ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்திய தி.மு.க.,வினர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்று தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.
அவரது அறிக்கை:
சென்னை வடபழனி ஆற்காடு சாலை அருகே, பணியில் ஈடுபட்டிருந்த மின்வாரிய ஊழியர்கள் மீது, விருகம்பாக்கம் தி.மு.க., சட்டமன்ற உறுப்பினர் பிரபாகர் ராஜாவின் அடியாட்களான, 136-வது வட்ட தி.மு.க., பொருளாளர் கார்த்தி மற்றும் வினோத் ஆகிய நபர்கள், காவல்துறையினர் கண்முன்னே, கடுமையான தாக்குதல் நடத்தியிருக்கும் காணொளி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. அரசு ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தும் திமிர் இவர்களுக்கு எங்கிருந்து வருகிறது?
கனிமொழி எம்.பி., பங்கேற்ற விழாவில், பெண் காவலரிடம் பாலியல் அத்து மீறலில் ஈடுபட்டதும் இதே பிரபாகர் ராஜாவின் அடியாட்கள்தான். தொடர்ந்து, பிரபாகர் ராஜாவின் அடியாட்களின் அராஜகம் அதிகரித்துக் கொண்டே இருந்தாலும், காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுப்பதாகத் தெரியவில்லை.
மின்வாரிய ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்திய தி.மு.க., ரவுடிகள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், குறைந்தபட்சம், இந்தப் பகுதிகளில், 'தி.மு.க.,வினர் உலவும் பகுதி, பொதுமக்கள் கவனத்துடன் இருக்கவும்' என்ற எச்சரிக்கைப் பலகையாவது வைத்தால், பொதுமக்கள், தாங்களே முன்னெச்சரிக்கையுடன் இருக்க வாய்ப்பிருக்கிறது.
இவ்வாறு அண்ணாமலை அறிக்கையில் கூறியுள்ளார்.

