ஐகோர்ட் கண்டனம், திருமாவளவன் அழுத்தம் விஜய் மீது வழக்கு போட தயாராகிறது தி.மு.க.,
ஐகோர்ட் கண்டனம், திருமாவளவன் அழுத்தம் விஜய் மீது வழக்கு போட தயாராகிறது தி.மு.க.,
ADDED : அக் 04, 2025 04:57 AM

சென்னை: த.வெ.க., தலைவர் விஜய் மீது வழக்குப்பதிவு செய்ய, தி.மு.க., அரசு தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த செப்டம்பர் 27ம் தேதி, கரூரில் விஜய் பங்கேற்ற பிரசாரத்தில், கூட்ட நெரிசலில் சிக்கி, 41 பேர் உயிரிழந்தனர். இது தமிழகத்தையும் தாண்டி, தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் அமைக்கப்பட்ட எட்டு எம்.பி.,க்கள் குழு, கரூர் வந்து விசாரித்து திரும்பியுள்ளது.
காங்கிரஸ் சார்பில், அக்கட்சியின் தேசிய பொதுச்செயலர் வேணுகோபால் கரூர் வந்து பார்வையிட்டுச் சென்றுள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் ஆகியோர், விஜயிடம் தொலைபேசியில் பேசி ஆதரவுக் கரம் நீட்டியுள்ளனர்.
தீவிர முயற்சி
இதனால், வரும் சட்டசபை தேர்தலில் கூட்டணி கணக்குகள் மாறக்கூடும் என பேச்சு எழுந்துள்ளது. 'தி.மு.க., -- த.வெ.க., இடையேதான் போட்டி' என, இதுவரை விஜய் பிரசாரம் செய்து வந்தார்.
ஆனால், கரூர் துயரச் சம்பவத்தால் ஏற்பட்ட நெருக்கடியால், அவர் கூட்டணி வைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும், அவரை அ.தி.மு.க., -- பா.ஜ., கூட்டணிக்குள் கொண்டு வர, அமித் ஷா தீவிர முயற்சி எடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இதை உறுதிப்படுத்துவது போல, ராமநாதபுரத்தில் நேற்று நடந்த அரசு விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின், 'தமிழகத்தில் இயற்கை பேரிடர் ஏற்பட்ட போதெல்லாம் உடனே வராத; நிதியை முறையாக தமிழகத்துக்கு தராத மத்திய நிதியமைச்சர், கரூருக்கு மட்டும் உடனே வருகிறார்.
மணிப்பூர் கலவரம், குஜராத் பால விபத்து, கும்பமேளா நெரிசல் உயிரிழப்பின் போது விசாரணைக்குழு அனுப்பாத பா.ஜ., கரூருக்கு மட்டும் உடனே அனுப்புகிறது.
கரூர் துயரச் சம்பவத்தில் ஏதேனும் அரசியல் ஆதாயம் கிடைக்குமா, இதை வைத்து யாரையாவது மிரட்டலாமா, உருட்டலாமா என பா.ஜ., பார்க்கிறது' என, கடுமையாக விமர்சித்துள்ளார்.
அ.தி.மு.க., - பா.ஜ., அணியில் விஜய் சேர்ந்தால், தங்கள் கூட்டணிக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என, தி.மு.க., நினைக்கிறது.
நெருக்கடி
அதனால், கரூர் துயரச் சம்பவத்தை பயன்படுத்தி, த.வெ.க.,வுக்கு கடும் நெருக்கடியை கொடுக்கவும், விஜய் பிரசாரம் செய்ய முடியாத நிலையை உருவாக்கவும், தி.மு.க., திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.
கரூர் சம்பவத்தில், த.வெ.க.,வின் செயல்பாடுகளை கடுமையாக கண்டித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், ஐ.ஜி., அஸ்ரா கர்க் தலைமையில் விசாரணை குழுவையும் அமைத்துள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி, 41 பேர் உயிரிழந்த வழக்கில் விஜய் பெயரை சேர்க்க, தி.மு.க., அரசு தயாராகி வருவதாக கூறப்படுகிறது.
அதற்காகவே, வி.சி., தலைவர் திருமாவளவன், 'விஜய் மீது நடவடிக்கை எடுக்க, தி.மு.க., அரசுக்கு என்ன தயக்கம்' என, கேள்வி எழுப்பியுள்ளார்.
எழுத்தாளர்கள், முன்னாள் அரசு உயர் அதிகாரிகள், சினிமா துறையினர் என பல பிரபலங்கள், 'விஜய் மீது நடவடிக்கை எடுக்க, தமிழக அரசு தயங்கக்கூடாது' என, கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர்.
எனவே, விஜய் மீது விரைவில் வழக்குப்பதிவு செய்ய இருப்பதாகவும், அதன் வாயிலாக, அ.தி.மு.க., - - பா.ஜ., கூட்டணியில் அவர் இணைவதை தடுக்க, தி.மு.க., காய்களை நகர்த்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால், விஜய் எந்த நேரமும் கைதாகலாம் என போலீஸ் வட்டாரங்களில் பரபரப்பாக பேசுகின்றனர்.