ADDED : ஜன 09, 2025 07:34 PM
சென்னை:யு.ஜி.சி., புதிய விதிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மத்திய அரசை கண்டித்து, தி.மு.க., மாணவர் அணி மற்றும் மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில், இன்று சென்னையில் ஆர்ப்பாட்டம் நடக்க உள்ளது.
தி.மு.க., மாணவர் அணி செயலர் எழிலரசன் அறிக்கை:
இந்திய அரசியலமைப்பு சட்டம் வழங்கும், கல்வி உரிமையையும், மாநில உரிமையையும் பறிக்க, மத்தியில் ஆட்சி செய்யும் ஆர்.எஸ்.எஸ்., - பா.ஜ., அரசு தொடர் முயற்சிகளை செய்து வருகிறது. தேசிய கல்விக் கொள்கை என்ற பெயரில், எளிய மக்களின் கல்வியை கபளீகரம் செய்வதற்கும், சமூக நீதியை பறிப்பதற்கும் செய்த முயற்சிகளை, தமிழகம் தொடர்ந்து எதிர்க்கிறது.
சமீபத்தில், பல்கலை மானியக் குழு வெளியிட்ட, வரைவு விதிமுறைகளுக்கு, மாணவர்களின் எதிர்ப்பை பதிவு செய்யும் வகையில், முதல் கட்டமாக, இன்று சென்னை, வள்ளுவர் கோட்டத்தில், கண்டன ஆர்ப்பாட்டம் நடக்க உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

