விமர்சனங்களை தாங்கும் சக்தி எங்களுக்கு உண்டு; விஜய் பேச்சுக்கு ஆர்.எஸ்.பாரதி பதில்
விமர்சனங்களை தாங்கும் சக்தி எங்களுக்கு உண்டு; விஜய் பேச்சுக்கு ஆர்.எஸ்.பாரதி பதில்
UPDATED : அக் 27, 2024 08:49 PM
ADDED : அக் 27, 2024 08:48 PM

சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டில் தி.மு.க.,வை விமர்சித்த அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு, தி.மு.க., முன்னாள் எம்.பி., ஆர்.எஸ்., பாரதி பதிலடி கொடுத்துள்ளார்.
விக்கிரவாண்டியில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு இன்று நடந்து முடிந்தது. விஜய்யின் பேச்சைக் கேட்கவும், கட்சியின் கொள்கை பற்றி அறிந்து கொள்வதற்காகவும், யாரும் எதிர்பார்க்காத வகையில், லட்சக்கணக்கான மக்கள் குவிந்தனர். கட்சியின் கொள்கை மற்றும் கோட்பாட்டை அறிமுகப்படுத்திய விஜய், தனது அரசியல் நிலைப்பாட்டை மக்கள் மத்தியில் முன் வைத்தார்.
தங்களின் முதல் எதிரி பிளவுவாத சக்திகள் என்றும், மற்றொரு எதிரி ஊழல் கபடதாரிகள் என்றும் கூறிய அவர், திராவிடமும், தமிழ் தேசியமும் இரு கண்கள் தான் என்பது எங்களின் தாழ்மையான கோரிக்கை என்றும் விஜய் கூறினார்.
தொடர்ந்து அவர் பேசியதாவது: இங்கே ஒரு கூட்டம் ரொம்ப காலமாக ஒரே பாட்டை பாடிக் கொண்டு, யார் அரசியலுக்கு வந்தாலும் குறிப்பிட்ட அரசியல் சாயத்தை பூசிக்கொண்டு பூச்சாண்டி காட்டிக் கொண்டு இருக்கிறது. எப்போது பார்த்தாலும் பாசிசம் பேசுகிறது. அவர்கள் பாசிசம் என்றால் நீங்கள் என்ன பாயாசமா? மக்கள் விரோத ஆட்சி நடத்தி விட்டு திராவிட மாடல் ஆட்சி என்று மக்களை ஏமாற்றுகின்றனர், எனக் கூறினார்.
திராவிட மாடல், குடும்ப அரசியல் என விஜய் குறிப்பிட்டு பேசியதால், தி.மு.க.,வை அவர் எதிர்ப்பது வெளிப்படையாகவே தெரிகிறது. இது தி.மு.க.,வினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இந்த நிலையில், விஜய்யின் பேச்சு குறித்து தி.மு.க., அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்., பாரதி பதிலளித்துள்ளார். அவர் கூறியதாவது: தி.மு.க., என்பது ஒரு ஆலமரம். விமர்சனங்களை எதிர்கொள்ளும் காய்ச்ச மரம் தான் கல்லடி படும். கவர்னர் முதல் நிறைய பேர் பேசியிருக்கிறார்கள். எந்த விமர்சனங்களையும் தாங்கிக் கொள்ளும் சக்தி எங்களிடம் உண்டு. வார்த்தைக்கு வார்த்தை பதில் அளிக்க முடியாது. தி.மு.க., என்பது தேம்ஸ் நதியைப் போன்றது, எனக் கூறினார்.
துணை முதல்வர் உதயநிதி கூறுகையில், 'விஜய்யின் பேச்சை பார்க்கவில்லை. பார்த்துவிட்டு பதில் சொல்கிறேன்,' எனக் கூறினார். தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டுக்கு முன்பாக, விஜய்க்கு துணை முதல்வர் உதயநிதி வாழ்த்து கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.