மோடி 'பார்முலா'வில் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை களமிறக்கும் தி.மு.க.,
மோடி 'பார்முலா'வில் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை களமிறக்கும் தி.மு.க.,
UPDATED : ஜூன் 06, 2025 06:19 AM
ADDED : ஜூன் 05, 2025 01:51 AM

சென்னை: பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் அரசு உயர் அதிகாரிகளுக்கு அமைச்சர் பதவி வழங்கியது போல், வரும் சட்டசபை தேர்தலில் போட்டியிட, முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கு 'சீட்' வழங்க தி.மு.க., முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து, அக்கட்சி வட்டாரங்கள் கூறியதாவது:
தமிழகத்தில் 2026 சட்டசபை தேர்தலில், கூட்டணி கட்சிகளுடன் சேர்த்து, 200 தொகுதிகளில் வெற்றி பெற தி.மு.க., மேலிடம் திட்டமிட்டுள்ளது.
தேர்தலில் எதிர்பார்த்தபடி மீண்டும் வெற்றி பெற்று, ஆட்சியை பிடித்தால், முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில், இளைஞர்களுக்கு அதிக அளவில் வாய்ப்பு வழங்கப்பட உள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தன் அமைச்சரவையில், முக்கிய துறைகளில் பணியாற்றிய முன்னாள் ஐ.பி.எஸ்., - ஐ.எப்.எஸ்., அதிகாரிகளுக்கு வாய்ப்பு அளித்து, அமைச்சராக்கி உள்ளார்.
இதே போல, தி.மு.க.,வுடன் நெருக்கமாக உள்ள ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகள் சிலருக்கு வரும் சட்டசபை தேர்தலில் சீட் வழங்க, தி.மு.க., தரப்பில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
ஐ.ஏ.எஸ்.,- ஐ.பி.எஸ்., அதிகாரிகளாக இருந்தோரை, தேர்தலில் போட்டியிட வைத்து வெற்றி பெற்று வருவோரை, எதிர்கால தி.மு.க., அமைச்சரவையில் அமைச்சராக்கவும் மேலிடத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்காக, கருணாநிதி காலத்தில் இருந்து, தி.மு.க., தலைமையின் குடும்பத்திற்கு நெருக்கமாக உள்ள, முன்னாள் ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகளில், அரசியல் பின்னணி உள்ளவர்கள் தொடர்பான விபரங்கள் சேகரிக்கப்பட்டு, கட்சி மேலிடத்துக்கு அளிக்கப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக, இருவருடைய பெயர்கள் தேர்வு செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளி வந்திருக்கிறது. இருவரில் ஒருவரை, திருவாரூர் மாவட்டத்தில் ஒரு தொகுதியிலும், சென்னையில் ஒரு தொகுதியிலும் போட்டியிட வாய்ப்பளிக்கலாம் என்றும் கட்சி தலைமை முடிவெடுத்துள்ளது.
தலைமையின் முடிவில் மாற்றம் ஏற்பட்டால், மேலும் சிலருக்கும் கூட வாய்ப்பு கிட்டலாம்.
இவ்வாறு கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.