தமிழகத்தில் மன்னராட்சி முறையை கொண்டு வர தி.மு.க., முயற்சி: இ.பி.எஸ்.,
தமிழகத்தில் மன்னராட்சி முறையை கொண்டு வர தி.மு.க., முயற்சி: இ.பி.எஸ்.,
ADDED : ஜன 26, 2024 03:50 PM

ஓமலூர்: திமுக இளைஞரணி மாநாட்டில் இன்பநிதியை அழைத்து வந்து மன்னராட்சி முறை கொண்டு வருவதற்கு அக்கட்சி முயற்சி செய்து வருகிறது என அதிமுக பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., பேசினார்.
சேலத்தில் மாற்றுக்கட்சியினர், இ.பி.எஸ்., முன்னிலையில் அ.தி.மு.க.,வில் இணையும் நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சியில் இ.பி.எஸ்., பேசியதாவது:
திமுக ஆட்சிக்கு வந்து இரண்டரை ஆண்டு காலம் ஆகிவிட்டது. இந்த ஆட்சியில் மக்களுக்கு என்ன நன்மை நடந்துள்ளது என்று மக்கள் கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டார்கள். திமுக என்பது ஒரு குடும்பக் கட்சி. ஒரு கம்பெனி. திமுக இளைஞரணி மாநாட்டில் இன்பநிதியை அழைத்து வந்துவிட்டனர். இதன்மூலம் திமுக மன்னராட்சி முறை கொண்டு வருவதற்கு முயற்சி செய்து வருகின்றது. திமுக சர்வாதிகார ஆட்சியை நடத்திக் கொண்டு வருகிறது.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது. எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை அதிகம் நடக்கிறது. விலைவாசிகள் விண்ணைமுட்டும் அளவிற்கு உயர்ந்து விட்டது. செலவு அதிகரித்துவிட்டதால் மக்கள் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். இவ்வாறு இ.பி.எஸ்., பேசினார்.
சுற்றுப்பயணம்
முன்னதாக இ.பி.எஸ்., வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: தமிழக நலனை முன்னிலைப்படுத்துவதும், இந்திய சமூக அரசியல் முன்னேற்றத்திற்கு ஆக்கப்பூர்வமான பங்களிப்பை வழங்குவதுமான ஒரு தேர்தல் அறிக்கையை தயாரிக்கும் பொருட்டு, தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினர் தமிழகம் முழுவதும் அடுத்த மாதம் பிப்., 5 முதல் 10 வரை சென்னை, சேலம், வேலூர், விழுப்புரம், நெல்லை, திருச்சி, கோவை, தஞ்சாவூர், மதுரை ஆகிய 9 மண்டலங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு மக்களையும் சந்தித்து தரவுகளை சேகரித்து சிறந்த தேர்தல் அறிக்கை தயார் செய்யப்பட உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் இ.பி.எஸ்., கூறியுள்ளார்.

