திருப்பரங்குன்றம் தீபத்துாணில் தீபம் ஏற்றவிடாமல் அரசியல் செய்யும் தி.மு.க.,: மத்திய அமைச்சர் குற்றச்சாட்டு
திருப்பரங்குன்றம் தீபத்துாணில் தீபம் ஏற்றவிடாமல் அரசியல் செய்யும் தி.மு.க.,: மத்திய அமைச்சர் குற்றச்சாட்டு
UPDATED : பிப் 23, 2026 06:19 AM
ADDED : பிப் 23, 2026 05:20 AM

அவனியாபுரம்: திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்ற நீதிமன்றம் உத்தரவிட்டும் தீபம் ஏற்ற விடாமல் தடுத்து தி.மு.க., அரசியல் செய்கிறது என மத்திய இணை அமைச்சர் முருகன் குற்றம் சாட்டினார்.
மதுரை மண்டேலா நகரில் மார்ச் 1ல் தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டம் நடக்கிறது. பிரதமர் மோடி, அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
ஏற்பாடுகளை பார்வையிட்ட பின் மத்திய அமைச்சர் முருகன் கூறியதாவது: திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் உத்தரவிட்டார். அதை இன்றுவரை தி.மு.க., அரசு நிறைவேற்றவில்லை. தீர்ப்பு வழங்கிய காரணத்திற்காக நீதிபதியை பதவிநீக்கம் செய்ய மனு கொடுத்து தி.மு.க., அரசியல் செய்கிறது.
காங்., யாருடன் கூட்டணி அமைக்கப் போகிறது எனத் தெரியவில்லை. எங்கள் கூட்டணி வலுவாக உள்ளது. எங்களது கூட்டணியின் தலைவர் பழனிசாமி மேலும் பல கட்சிகளுடன் பேசி வருகிறார். தமிழ்நாடு அணிக்கும் டில்லி அணிக்கும் தான் போட்டி என முதல்வர் பேசி வருகிறார். நாம் தமிழகத்து அணி, டில்லி அணி, தேசத்து அணி. இந்த தேசத்தின் நலனுக்கு இரட்டை இன்ஜின் அரசுதான் தேவை.
பீகார், அரியானா, மகாராஷ்டிரா, உ.பி., உள்ளிட்ட மாநிலங்கள் வேகமாக முன்னேற காரணம் இரட்டை இன்ஜின் அரசுதான். தமிழகத்திலும் அதைதான் மக்கள் விரும்புகிறார்கள்.
தி.மு.க., - தே.மு.தி.க., கூட்டணியை விஜயகாந்த் ஆன்மா ஏற்றுக்கொள்ளுமா என்பது கேள்விக்குறி. அவர் கட்சி ஆரம்பித்ததே தி.மு.க.,வுக்கு எதிராகத்தான். அவர் வாழ்நாள் முழுவதும் தி.மு.க., விற்கு எதிரான அரசியல் செய்து வந்தார் என்பது எல்லோருக்கும் தெரியும் என்றார்.

