ADDED : நவ 20, 2024 05:36 AM

திருப்பூர் : “அ.தி.மு.க., என்ற வெள்ளத்துடன் இணைபவர்கள், ஆட்சி என்ற கடலில் சேர்வர்; ஒதுங்கி செல்பவர்கள் அனைவரும் காலி டப்பா தான்,” என, பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்துள்ளார்.
திருப்பூரில், அ.தி.மு.க., தேர்தல் பிரிவு செயலர் பொள்ளாச்சி ஜெயராமன் அளித்த பேட்டி:
வரும் 2026 சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., உறுதியாக ஆட்சி அமைக்கும். அ.தி.மு.க., ஆளுங்கட்சியாகவும், எங்கள் கூட்டணியிலுள்ள ஒரு கட்சி எதிர்க்கட்சியாகவும் வரும். அனைத்து தரப்பினரும், அ.தி.மு.க., ஆட்சியை எதிர்பார்க்கின்றனர்.
எங்களுடன் கூட்டணியில் வரும் கட்சி தான் பிரதான எதிர்க்கட்சியாக வரும். இதில் எந்த சந்தேகமும் கிடையாது. எவ்வகையிலும் தகுதியில்லாமல் துணை முதல்வர் ஆனது உதயநிதி மட்டுமே. அ.தி.மு.க., ஜனரஞ்சகமான மக்கள் இயக்கம்; சாமானியரான பழனிசாமியின் அலை தமிழகத்தில் வீசத் துவங்கிவிட்டது.
அ.தி.மு.க., என்ற வெள்ளத்துடன் இணைபவர்கள் ஆட்சி என்ற கடலில் சேர்வார்கள்; ஒதுங்கி செல்பவர்கள் அனைவரும் காலி டப்பாதான்.
தி.மு.க., கூட்டணியில் இருந்து வெளியே வரும் கட்சிகள் அனைத்துக்கும், அ.தி.மு.க., ஆதரவு கொடுத்து, வாழ்வும் கொடுக்கும்.
சிறிய கட்சிகளாக இருந்தாலும் பல கட்சிகளுக்கு சின்னம் பெற்றுக் கொடுத்ததே ஜெயலலிதா தான். வரும் 2026 சட்டசபைத் தேர்தலுக்கு பின், தி.மு.க., என்ற கட்சி இல்லாமல் போகும். இது ஜோதிடம் அல்ல; என் எதார்த்த கணிப்பு.
இவ்வாறு அவர் கூறினார்.

