திமுக மேலும் வீழ்ச்சி அடையும்; விடாமல் சீண்டும் மாணிக்கம் தாகூர்
திமுக மேலும் வீழ்ச்சி அடையும்; விடாமல் சீண்டும் மாணிக்கம் தாகூர்
ADDED : ஜூன் 06, 2026 03:42 PM

சென்னை: மக்களின் தீர்ப்பை மதித்து சுய பரிசோதனை செய்வதற்கு பதிலாக மற்றவர்களை குறை கூறிக் கொண்டே இருந்தால் திமுகவின் வீழ்ச்சி மேலும் வேகமாகும் என்று காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் கூறி உள்ளார்.
அவரது அறிக்கை;
2026 தேர்தலில் 131 இடங்களில் இருந்த திமுகவை மக்கள் 59 இடங்களுக்கு குறைத்தது ஏன் என்பதை பற்றி திமுக தலைமை சிந்தித்ததா? மக்கள் ஏன் திமுகவை நிராகரித்தார்கள் என்பதை ஆராய்வதற்கு பதிலாக, எதிர்க்கட்சி தலைவர் ராகுலையும் காங்கிரஸையும் தாக்குவது தோல்வியை மறைக்கும் முயற்சியாக மட்டுமே தெரிகிறது.
திமுக பல தேர்தல் தோல்விகளை கடந்த காலத்தில் சந்தித்துள்ளது. ஆனால் அப்போதெல்லாம் கருணாநிதி இருந்தார். தோல்வியை அரசியல் முதிர்ச்சியுடனும் சாதுர்யத்துடனும் ஏற்றுக் கொண்டு, காரணங்களை ஆராய்ந்து மீண்டு வந்தார். ஆனால் இன்றைய திமுக உதயநிதி தலைமையால் இந்த ஒரு தோல்வியைக் கூட அரசியல் நாகரிகத்துடன் எதிர்கொள்ள முடியவில்லை.
மாறாக, கூட்டணியில் இருந்த தோழமைக் கட்சிகள் மீதும், குறிப்பாக காங்கிரஸ் மீதும் விஷ வார்த்தைகளை கக்கி வருகிறது. இதையெல்லாம் பார்க்கும்போது, பாஜவிடம் தங்களின் காங்கிரஸ் எதிர்ப்பை நிரூபித்து, அவர்களுடன் ஒட்டியும் உறவாடியும் செல்லும் முயற்சியின் கூக்குரலாகவே தெரிகிறது.
குறிப்பாக உதயநிதி அரசியல் தோல்வி, நிர்வாக முதிர்ச்சியின்மை மற்றும் மக்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றத தவறிய நிலை திமுகவுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. அதற்கான தண்டனையைத்தான் மக்கள் தேர்தலில் வழங்கியுள்ளனர்.
மக்களின் தீர்ப்பை மதித்து சுயபரிசோதனை செய்வதற்குப் பதிலாக, மற்றவர்களை குறை கூறிக் கொண்டே இருந்தால் திமுகவின் வீழ்ச்சி மேலும் வேகமாகும். மக்கள் ஏற்கனவே ஒரு செய்தியை தெளிவாக சொல்லிவிட்டார்கள். ஊழல், கமிஷன், இரட்டை வேடம் மற்றும் அதிகார அகந்தைக்கு தமிழகத்தில் இனி இடமில்லை.
இவ்வாறு மாணிக்கம் தாகூர் கூறி உள்ளார்.
