இஸ்லாமியர்களுக்கு தி.மு.க. துணை நிற்கும்: கனிமொழி
இஸ்லாமியர்களுக்கு தி.மு.க. துணை நிற்கும்: கனிமொழி
ADDED : ஜன 13, 2025 06:27 AM
காட்டுமன்னார்கோவில் : காட்டுமன்னார்கோவில் அடுத்த லால்பேட்டையில் நடந்த இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மாவட்ட மாநாட்டில் தி.மு.க., துணை பொதுசெயலாளர் கனிமொழி எம்.பி., பேசியதாவது:
அண்ணாவிற்கு பிறகு, யார் முதல்வராக வேண்டும் என கேள்வி எழுந்த போது, தமிழ் மக்கள் வளர்ச்சி அடைய கருணாநிதி தான் முதல்வராக வர வேண்டும் என, காயிதேமில்லத் வலியுறுத்தினார்.
காயிதேமில்லத் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருந்தபோது, பார்க்க சென்ற கருணாநிதி கையை பிடித்துக்கொண்டு, நான் என் மக்களை உங்களிடம் ஒப்படைத்து செல்கிறேன் என கூறிவிட்டு சென்றார். அந்த நம்பிக்கைக்கு ஏற்ப, இன்று வரை தி.மு.க., இஸ்லாமியர்களுக்கு அரணாக உள்ளது.
மத்திய பா.ஜ., அரசு, இஸ்லாமிய பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட ஸ்காலர்ஷிப் நிறுத்தி விட்டனர். ஆனால் அதனை தமிழக அரசு தொடர்ந்து வழங்கி வருகிறது. பா.ஜ., அரசு உடை, இறை வழிபாடு, உணவு பண்பாடு போன்ற மனித அடிப்படை உரிமைகள் பறிக்கிறது.
மத்திய பா.ஜ., அரசு சிறுபான்மையினருக்கு எதிராகவும், பிரிவினைக்கு ஆதரவாக தொடர்ந்து செயல் படுகிறது. இது தமிழ்நாட்டில் எடுபடாது. நாம் மதத்தால் பிரிந்தோம் என்றால், 'மெஜாரிட்டி, மைனாரிட்டி' வரும். ஆனால் மொழியால் நிமிர்ந்து நின்றோம் என்றால், நாம் மட்டுமே தமிழ் நாட்டில் மெஜாரிட்டியாக இருப்போம், வேறு யாருக்கும் இங்கு இடம் இல்லை. இந்த உணர்வோடு நாம் தொடர்ந்து போராட வேண்டும்.