ADDED : ஜன 27, 2025 07:28 AM

கொடைக்கானல்: ''தமிழகத்தில் மத மோதல்களுக்கு தி.மு.க., துணை போகிறது,'' என, பா.ஜ., சிறுபான்மை பிரிவு தேசிய செயலர் வேலுார் இப்ராஹிம் குற்றஞ்சாட்டினார்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் நேற்று அவர் கூறியதாவது:
கடந்த 2,000 ஆண்டுகள் பெருமைவாய்ந்த திருப்பரங்குன்றத்தில், 200 ஆண்டுகளுக்கு முன் சிக்கந்தர் தர்க்காவிற்கு ஹிந்துக்கள் சகிப்புத்தன்மையுடன் இடம் கொடுத்தனர். ஆனால், இன்று எஸ்.டி.பி.ஐ., முஸ்லிம் லீக் உள்ளிட்ட பிற பயங்கரவாதத்தை துாண்டும் அமைப்புகள் திருப்பரங்குன்றத்தில் மாட்டுக்கறி பிரியாணியை சாப்பிட்டு, அதன் புனிதத்தை கெடுத்துள்ளனர்.
அதற்கு போலீசாரும் உடந்தையாக இருந்துள்ளனர். இதை எதிர்த்து, இஸ்லாமியரான நான் நியாயமான கருத்தை வெளியிட முயற்சிக்கையில், போலீசார் என்னை கைது செய்து அதிகார துஷ்பிரயோகம் செய்தனர். இப்பிரச்னைக்கு காரணமான தி.மு.க., தமிழகத்தில் மத மோதல் ஏற்பட துணை போவதை உறுதிப்படுத்துகிறது.
இந்தியாவை துண்டாடும் சில அமைப்புகள் ஆன்மிக பூமியான தமிழகத்தை களங்கப்படுத்துகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.

