2026ம் ஆண்டு தேர்தலிலும் திமுகவுக்குதான் வெற்றி: முதல்வர் ஸ்டாலின் பேச்சு
2026ம் ஆண்டு தேர்தலிலும் திமுகவுக்குதான் வெற்றி: முதல்வர் ஸ்டாலின் பேச்சு
ADDED : அக் 28, 2025 12:29 PM

சென்னை: ''2026ம் ஆண்டு தேர்தலிலும் நாம் தான் வெற்றி பெறப்போகிறோம். ஆணவத்தில் சொல்லவில்லை; உங்கள் உழைப்பு, ஆட்சியின் சாதனை, மக்கள் மேல் உள்ள நம்பிக்கையில் சொல்கிறன்'' என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் வெற்றி பெறுவதற்கு செய்யவேண்டிய பணிகளைக் குறித்து விவாதித்து அவற்றைத் தமிழகம் முழுவதும் செயல்படுத்துவதற்கான பயிற்சிக் கூட்டம் இன்று (அக் 28) மாமல்லபுரம் கிழக்குக் கடற்கரைச் சாலையில் நடந்தது. இந்த கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: இங்க உட்கார்ந்திருக்க உங்க மனசுல, இப்போ என்ன ஓடிட்டு இருக்குனு, எனக்கு நல்லா தெரியுது. என்னடா, தலைவரும் சும்மா இருக்க மாட்றாரு, நம்மையும் சும்மா இருக்க விடமாட்றாருனு சிலர் நினைப்பீங்க. சுணங்கி சும்மா இருந்துட்டா, நாம ஒரே இடத்துல தேங்கிடுவோம். அது தேக்கம். உழைப்பைக் கொடுத்து லட்சியத்தை நோக்கி இயங்கிட்டே இருக்க வேண்டும். அதுதான் இயக்கம்.
7வது முறை ஆட்சி
நம்மோட இயக்கம் எந்நாளும் தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருப்பதற்கு அடித்தளமான உங்களை நம்பி, ''என் வாக்குச்சாவடி, வெற்றி வாக்குச்சாவடி'' என்ற முழக்கத்தை முன்னெடுத்திருக்கோம். உங்களோட உழைப்பால, ஆறாவது முறையா ஆட்சிப் பொறுப்புல இருக்குற நாம, அடுத்து ஏழாவது முறையாவும் ஆட்சி அமைக்க வேண்டும். அதுக்குத்தான் இந்தப் பயிற்சிக் கூட்டம். என்னோட அழைப்பை ஏற்று, தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் இருந்து வந்த நிர்வாகிகள் அனைவரும், இந்தச் செய்தியை உங்க மாவட்டத்துக்கு, நகரத்துக்கு, கிராமத்துக்கு எடுத்துச் செல்லுங்கள்.
நம்பிக்கை
நான் சொன்னதை சொல்லுங்க. நான் கேட்டுக்கொண்டதை சொல்லுங்க. ஒவ்வொரு தொண்டரையும் நான் விசாரிச்சதா சொல்லுங்க. நான் உழைக்கச் சொன்னதை சொல்லுங்க. நான் அவர்களை நம்பி இருக்கேன் என்று சொல்லுங்க. 2026ம் ஆண்டு தேர்தலிலும் நாம் தான் வெற்றி பெறப்போகிறோம். ஆணவத்தில் சொல்லவில்லை; உங்கள் உழைப்பு, ஆட்சியின் சாதனை, மக்கள் மேல் உள்ள நம்பிக்கையில் சொல்கிறன். 2021ம் ஆண்டு தேர்தல் தமிழகத்தை அதிமுகவிடம் இருந்து மீட்ட தேர்தல்.
நிரூபிக்கணும்
2026ம் ஆண்டு தேர்தல் என்பது தமிழகத்தை பாஜ, அதிமுகவிடம் இருந்து பாதுகாப்பதற்கான தேர்தல். தமிழகத்தை நிரந்தரமாக ஆளும் தகுதி திமுகவுக்கு தான் இருக்கிறது என்பதை நிரூபிக்க வேண்டும். அதிமுக-பாஜ கூட்டணியை தமிழக மக்கள் விரும்பவில்லை. அவங்க கட்சிக்காரங்களும் விரும்பவில்லை. மற்ற கட்சியினரும் அந்தக் கூட்டணிக்கு போகவில்லை. நம்ம வெற்றிகள், எதிரிகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

