ஏழாவது முறை தி.மு.க., ஆட்சி அமைக்க ஏழு சட்டசபை தொகுதிகளிலும் வெற்றி விருதுநகரில் முதல்வர் ஸ்டாலின் சூளுரை
ஏழாவது முறை தி.மு.க., ஆட்சி அமைக்க ஏழு சட்டசபை தொகுதிகளிலும் வெற்றி விருதுநகரில் முதல்வர் ஸ்டாலின் சூளுரை
ADDED : நவ 09, 2024 11:22 PM
விருதுநகர்:''ஏழாவது முறை தி.மு.க., ஆட்சி அமைக்க இம்மாவட்டத்திலுள்ள ஏழு சட்டசபை தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்,'' என, விருதுநகரில் நடந்த தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் சூளுரைத்தார்.
முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: விருதுநகர் மாவட்டத்தில் மாநாடுகளை நடத்துவதை வழக்கமாக வைத்திருந்தோம். 2004 லோக்சபா தேர்தலை முன்னிட்டு விருதுநகரில் தென்மண்டல மாநாடு நடத்தப்பட்டது. அந்த தேர்தலில் 40க்கு 40 பெற்றது தி.மு.க., கூட்டணி. 2024 தேர்தலில் நாற்பதுக்கு நாற்பது என்ற முழக்கத்தை முதன் முதலாக 2022ல் விருதுநகரில் நடந்த முப்பெரும் விழாவில் தான் முன்வைத்தேன். சொன்னது போலவே வென்று விட்டோம்.
திராவிட இயக்கத்திற்கு விதை துாவிய மாபெரும் மனிதர்கள் வாழ்ந்த ஊர் இந்த விருதுநகர். இளைஞரணி செயலாளராக இருந்த போது மாவட்டங்களுக்கு சென்று கொடி ஏற்றினேன். விருதுநகர் வந்த போது என் காலடித்தடம் படாத இடமே இல்லை. இம்மாவட்டத்தின் ஏழு தொகுதிகளிலும் தி.மு.க., வெற்றி பெறும். நிர்வாகிகள் கடுமையாக உழைத்து வெற்றியை தேடி தர வேண்டும். யார் யாரெல்லாம் தி.மு.க., குறித்து பேசி கொண்டிருக்கின்றனரோ அவர்களுக்கு பதில் கூற வேண்டிய அவசியமில்லை. நம் திட்டங்களை செயல்படுத்துவதற்கும், மக்களுக்காக உழைப்பதற்குமே நேரம் போதுமானதாக உள்ளது. 2026 சட்டசபை தேர்தலில் 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறுவோம். இதற்கு கடுமையாக உழைக்க வேண்டும். மக்களை சந்தித்து நாம் செய்கிறவற்றை எடுத்து கூறுங்கள். திண்ணை பிரசாரம், தெருமுனை கூட்டங்கள் நடத்தி மக்களை சந்தியுங்கள். குறிப்பாக இளைஞர்களை சந்தித்து அவர்களுக்கு கொள்கைகளை எடுத்து கூறுங்கள். இவ்வாறு பேசினார்.
அமைச்சர்கள் சாத்துார் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, எ.வ.வேலு, கணேசன் பங்கேற்றனர். அணி அமைப்பாளர்கள், நகர, ஒன்றிய செயலாளர்கள் பங்கேற்றனர்.