ADDED : நவ 14, 2025 01:10 AM
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி கடந்த 4ம் தேதி துவங்கியது. இதற்கான விண்ணப்பங்கள், ஓட்டுச்சாவடி முகவர்கள் வாயிலாக வீடுதோறும் வினியோகம் செய்யப்படுகின்றன.
வாக்காளர் விண்ணப்ப படிவம் வினியோகம், படிவம் பூர்த்தி செய்தல் போன்ற பணிகளில், ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு உதவ, அனைத்து கட்சிகளிலும் ஓட்டுச்சாவடி முகவர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
ஆனால், பெரும்பாலான பகுதிகளில் அ.தி.மு.க., வினர் ஆர்வமுடன் இப்பணியில் ஈடுபடவில்லை. தி.மு.க.,வினர் தீயாக வேலை செய்கின்றனர்.
சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி மேற்கொள்வதற்காக, அமைச்சர்கள் உள்ளிட்ட எட்டு பேர், எட்டு மண்டலங்களுக்கு பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.
அவர்களின் மேற்பார்வையில், மாவட்டச் செயலர்கள், தொகுதி பார்வை யாளர்களுக்கு சென்னையிலும், மற்ற மாவட்டங்களிலும், ஒன்றிய, நகர, பேரூர், கட்சி நிர்வாகிகளுக்கு, வழக்கறிஞர் குழுவினராலும், ஒவ்வொரு தொகுதியிலும் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி குறித்து பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
சிறப்பு வாக்காளர் திருத்தப் பணிகள் நடப்பதை, மண்டல பொறுப்பாளர்கள் நேரடியாக கண்காணிக்கின்றனர். இது தவிர, சென்னை அறிவாலயத்தில் வாக்காளர்களுக்கு உதவ, உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. அதை தொடர்பு கொண்டு, சந்தேகங்கள் கேட் போருக்கு உரிய விளக்கம் அளிக்கப்படுகிறது.
சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியை, ஒரு புறம் தி.மு.க.,வினர் எதிர்த்தாலும், மறுபுறம் மக்களுக்கு தேவையான உதவிகளை செய்து, அவர்கள் மனதில் இடம் பிடிக்க முயற்சித்து வருகின்றனர்.
பெரும்பாலான இடங்களில் வாக்காளர் விண்ணப்ப படிவங்களை வினியோகம் செய்வதுடன், அவற்றை பூர்த்தி செய்ய மக்களுக்கு உதவுவது, மீண்டும் அவற்றை பெற்று ஓட்டுச்சாவடி அலுவலரிடம் ஒப்படைப்பது போன்ற பணியிலும் ஈடுபட்டுள்ளனர்.
- நமது நிருபர் -

