தி.மு.க., திசை திருப்பல் மக்களிடம் எடுபடாது: நயினார்
தி.மு.க., திசை திருப்பல் மக்களிடம் எடுபடாது: நயினார்
ADDED : ஏப் 16, 2025 08:57 PM

துாத்துக்குடி:சுதந்திரப் போராட்ட வீரர் சுந்தரலிங்கத்தின் 255வது பிறந்த நாளை ஒட்டி, துாத்துக்குடி மாவட்டம், கவர்னகிரியில் அவரது சிலைக்கு, தமிழக பா.ஜ., தலைவர் நயினார் ராஜேந்திரன், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பின், அவர் அளித்த பேட்டி:
பிரதமர் மோடி ராமேஸ்வரம் வந்தபோது, 'தமிழகத்தில் இருந்து வரும் கடிதங்களில் ஆங்கில கையெழுத்தே உள்ளது என்று கூறினார். அதையடுத்து தற்போது, 'அரசாணை அனைத்தும் இனி தமிழில் வெளியிடப்படும்; தமிழில் மட்டுமே கையெழுத்திட வேண்டும்' என தமிழக அரசு அறிவித்துள்ளது.
தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்தை, பட்டியல் பிரிவில் இருந்து வெளியே கொண்டு வர வேண்டும் என சட்டசபையில் பதிவு செய்துள்ளேன்.
மாநில உரிமைகள் பறிக்கக்கூடாது என்பதில் எங்களுக்கு மாற்று கருத்து இல்லை. அதற்காக, மாநில சுயாட்சி கோஷம் தேவையில்லை. மாநில சுயாட்சி விவகாரத்தில், அம்பேத்கர், என்ன சொல்லி இருந்தாரோ, அதை செய்தால் போதும்.
ஜெயலலிதா ஆட்சி காலத்தில், போலீசார் உடனடி நடவடிக்கை எடுத்தனர். ஆனால், தற்போது அந்நிலை மாறி விட்டது. அதனாலேயே, தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சரியில்லாமல் போய் விட்டது. முதல்வர் உள்துறை அமைச்சராக இருந்தும், போலீசாரிடம் வேலை வாங்க முடியவில்லை.
பணப்பரிமாற்றம் அளவுக்கு அதிகமாக இருக்கும்போது, அமலாக்கத்துறை நடவடிக்கை எடுக்கும். டாஸ்மாக்கில் மிகப் பெரிய ஊழல் நடந்துள்ளது. அதன் மீது அமலாக்கத்துறை நடவடிக்கை எடுக்கிறது. அதை மறைக்க, மாநில சுயாட்சியை முதல்வர் கையில் எடுத்துள்ளார். தி.மு.க., திசை திருப்பல் இனி, மக்களிடம் எடுபடாது.
இவ்வாறு அவர் கூறினார்.