நேரடியாக வரும் பத்திரங்களை நிராகரிக்காதீர்; சார் - பதிவாளர்களுக்கு பதிவுத்துறை உத்தரவு
நேரடியாக வரும் பத்திரங்களை நிராகரிக்காதீர்; சார் - பதிவாளர்களுக்கு பதிவுத்துறை உத்தரவு
ADDED : டிச 16, 2025 05:31 AM

சென்னை: 'பொது மக்கள் நேரடியாக தாக்கல் செய்யும் பத்திரங்களை, உரிய காரணமின்றி நிராகரிக்கக் கூடாது' என, சார் - பதிவாளர்களுக்கு பதிவுத் துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில், சார் - பதிவாளர் அலுவலகங்களில், பொது மக்களால் நேரடியாக சார் - பதிவாளர்களை அணுக முடியாத நிலை உள்ளது.
இதனால், வில்லங்க சான்று வாங்க வேண்டும் என்றாலும், ஆவண எழுத்தர்களை நாடும் நிலை ஏற்படுகிறது.
அதிலும், சார் - பதிவாளருக்கு தெரிந்த ஆவண எழுத்தர் வாயிலாக வரும் பத்திரங்கள், விண்ணப்பங்களுக்கு மட்டுமே வேலை நடக்கிறது.
இதனால், பெரும்பாலான மக்கள் அனைத்து வேலைக்கும் ஆவண எழுத்தர்களையே நம்பியிருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.
ஆனால், பதிவுத்துறையின் விதிகளின்படி, பொதுமக்கள் நேரடியாக பத்திரங்களை தாக்கல் செய்யலாம். சார் - பதிவாளர்கள் இதில் சரியாக செயல்படவில்லை என, பல்வேறு தரப்பில் இருந்து, பதிவுத் துறைக்கு புகார் வந்துள்ளது.
இது குறித்து, பதிவுத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
பத்திரப்பதிவுக்கான, 'ஆன்லைன்' தளத்தில், குடிமக்கள் என்ற பெயரில் பொது மக்களுக்கான நுழைவு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாக, பொது மக்கள் விதிகளுக்கு உட்பட்டு, பத்திர விபரங்களை பதிவிடலாம்.
இந்த விபரங்கள் சரியாக இருக்கும்பட்சத்தில், அவர்களுக்கு 'டோக்கன்' ஒதுக்கப்படும். இதை பொது மக்கள், ஆன்லைன் முறையிலேயே பிரதி எடுத்துக்கொள்ளலாம். அதன் அடிப்படையில் கட்டணம் செலுத்தி, சார் - பதிவாளரிடம் பத்திரத்தை தாக்கல் செய்யலாம்.
இவ்வாறு வரும் பத்திரங்களை உரிய காரணம் இன்றி, சார் - பதிவாளர் நிராகரித்தால், அது குறித்து பதிவுத்துறை தலைமை அலுவலகத்தில் புகார் செய்யலாம்.
நேரடியாக வரும் பத்திரங்களை வேண்டுமென்றே நிராகரிக்கும் சார் - பதிவாளர்கள் மீது, நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

