முதலில் சொன்னதை செய்யுங்கள்: தி.மு.க.,விற்கு இடைநிலை ஆசிரியர்கள் பதில்
முதலில் சொன்னதை செய்யுங்கள்: தி.மு.க.,விற்கு இடைநிலை ஆசிரியர்கள் பதில்
ADDED : பிப் 05, 2024 03:50 AM

மதுரை: லோக்சபா தேர்தல் அறிக்கை தயாரிப்புக்காக கருத்துகள் கேட்டு அழைப்பு விடுத்துள்ள தி.மு.க.,வுக்கு, 'சட்டசபை தேர்தலில் ஏற்கனவே அறிவித்த 311வது அறிவிப்பான 'சமவேலைக்கு சமசம்பளம் வழங்கப்படும்' என்ற வாக்குறுதியை முதலில் நிறைவேற்றி 'சொன்னதை செய்யுங்கள்...' என 14 ஆண்டுகள் சம்பள பிரச்னையால் பாதிக்கப்பட்ட 20 ஆயிரம் ஆசிரியர்கள் பதில் அனுப்பும் போராட்டத்தை துவக்கியுள்ளனர்.
தமிழகத்தில் 1.6.2009 க்கு பின் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.5200 எனவும், 1.6.2009 க்கு முன் நியமிக்கப்பட்டவர்களுக்கு ரூ.8370 எனவும் அடிப்படை சம்பளம் நிர்ணயிக்கப்பட்டது. ஒருநாள் வித்தியாசத்தில் ஒரே கல்வித்தகுதி, ஒரே பணிக்கு இருவேறு சம்பளம் நிர்ணயிக்கப்பட்டது. இதில் 20 ஆயிரம் ஆசிரியர்கள் பாதித்துள்ளனர். 14 ஆண்டுகளாக இந்த ஏற்றத்தாழ்வு சம்பள நிர்ணயத்தை களைய கோரி போராட்டங்கள் நடந்தன.
இந்நிலையில் 2021ல் நடந்த சட்டசபை தேர்தலின்போது இக்கோரிக்கையை நிறைவேற்றுவதாக கூறி 311 வது வாக்குறுதியாக தி.மு.க., தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றது. ஆனால் தற்போது வரை நிறைவேற்றவில்லை. ஆனால் முதல்வர் ஸ்டாலின் 80 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டதாக தொடர்ந்து கூறிவருகிறார்.
இந்நிலையில் லோக்சபா தேர்தல் அறிக்கை தயாரிப்புக்காக தி.மு.க., மீண்டும் கருத்து கேட்டுள்ள நிலையில், எஸ்.எஸ்.டி.ஏ., ஆசிரியர்கள் அனைவரும் தி.மு.க.,வுக்கு பதில் அளிக்கும் வகையில், ''முதலில் 311 ஐ நிறைவேற்றி சொன்னதை செய்யுங்கள்...'' என தபால், வாட்ஸ் ஆப், டுவிட்டர்களில் பதில் அளித்து வருகின்றனர்.
பிப்., 12ல் போராட்டம்
இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர் சங்க (எஸ்.எஸ்.டி.ஏ.,) பொது செயலாளர் ராபர்ட், துணைத் தலைவர் வேல்முருகன், பொருளாளர் கண்ணன் கூறியதாவது:
ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியம் திட்டத்தை மீண்டும் அமல்படுத்தப்படும் உள்ளிட்ட எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றாமல் தற்போது மீண்டும் லோக்சபா தேர்தலுக்கான வாக்குறுதிகள் தயாரிக்க, தி.மு.க., கருத்து கேட்டுள்ளது. இது ஆசிரியர், அரசு ஊழியர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
அதேநேரம் ராஜஸ்தான், தெலுங்கானா உள்ளிட்ட சில மாநிலங்களில் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கு குறைந்தபட்சம் 14 ஆண்டுகளாக பாதித்த 20 ஆயிரம் ஆசிரியர்களின் பிரச்னையையாவது முதலில் தீர்க்க நடவடிக்கை வேண்டும். இதை வலியுறுத்தி பிப். 12 முதல் சென்னை, மாவட்ட தலைநகர்களில் தொடர் போராட்டங்கள் நடத்த எஸ்.எஸ்.டி.ஏ., முடிவு செய்துள்ளது என்றனர்.

