விஜய் கட்சியுடன் கூட்டணியா; திருமாவளவன் அந்த தவறை செய்ய மாட்டார்: சீமான் திட்டவட்டம்
விஜய் கட்சியுடன் கூட்டணியா; திருமாவளவன் அந்த தவறை செய்ய மாட்டார்: சீமான் திட்டவட்டம்
UPDATED : நவ 02, 2024 05:55 PM
ADDED : நவ 02, 2024 12:33 PM

சென்னை: ''விஜய் கட்சியுடன் கூட்டணி வைக்கும் அந்த தவறை திருமாவளவன் செய்யவே மாட்டார்,'' என்று நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் கூறினார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியதாவது: பச்சிளம் பாலகன் பாலச்சந்திரன் நெஞ்சிலே 5 குண்டு தாங்கி மரணித்து கிடக்கும் போது, தமிழ் தேசியம் பதறி துடித்தது. அதே சமயத்தில் சிறிதும் பதற்றம் இல்லாமல், பதவியேற்றது திராவிடம். இருமொழிக் கொள்கையில், அடுத்தவன் மொழி எப்படி எங்களின் கொள்கை மொழியாகும். எங்க அப்பாவும் அப்பா, அடுத்த வீட்டுக்காரனும் எங்களுக்கு அப்பாவா? எனக்கு கொள்கை மொழி தாய் மொழி தமிழ்தான். மலையாளத்தவர், கன்னடத்தவர், தெலுங்கர் என யாராக இருந்தாலும், அவரவர் மொழி, அவர்களுக்கு கொள்கை மொழி. இந்தி உள்பட எந்த மொழியாக இருந்தாலும் விரும்பினால் கற்போம்.
மும்மொழி கொள்கை என்பது மோசடி கொள்கை. இருமொழி கொள்கை என்பது ஏமாற்றுக் கொள்கை, தமிழே எங்களின் கொள்கை.
மதச்சார்பற்ற சமூக நீதி எப்படி? பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10 சதவீதம் இடஒதுக்கீடு, அருந்ததியர்களுக்கு 3 சதவீதம் உள்ஒதுக்கீடு ஏற்றுக் கொள்கிறீர்களா? தி.மு.க.,வும் தான் ரொம்ப நாளாக சமூக நீதி பற்றி பேசிக் கொண்டே இருக்கிறது. அது ஜமுக்காள நீதி கூட கிடையாது. தமிழக அமைச்சரவையில் எத்தனை பெண்களுக்கு இடம் கொடுத்திருக்கிறீர்கள்?
குட்டி கதையல்ல
முத்து ராமலிங்க தேவரும், மூக்கையா தேவரும் பர்மாவுக்கு போறாங்க. இது குட்டி கதையல்ல, கேட்டுக்கோ, வரலாறு! பெண்கள் தரையில் படுத்து முடியை பாய் போல விரிச்சு, அதில் நடந்து போக சொன்னார்கள். ஆனால், இவர்கள் இருவரும் பெண்களை மதிக்கும் நாட்டில் இருந்து வந்தவர்கள் நாங்கள், பெண்களை எழுந்திரிக்கச் சொல்லுங்கள், இல்லையேல் திரும்பி சென்று விடுவேன் என்று சொன்னார்கள். இதுதான் பெண்ணியம் உரிமை.
மதுக்கடைகளை மூடச் சொல்கிறது தமிழ்தேசியம். தெருவுக்கு 2 மதுக்கடைகளை திறப்பது திராவிடம். ரெண்டும் ஒன்றா, வில்லனும், ஹீரோவும் ஒன்றா?திராவிடத்தை வளர்க்க நீங்கள் ஏன் கட்சி தொடங்க வேண்டும் என்பதை விஜய் விளக்க வேண்டும். விஜய்யின் கொள்கைகள் அடிப்படையிலேயே தவறாக உள்ளன.
திராவிடமும், தமிழ் தேசியமும் வேறு வேறானவை. இரண்டும் கொள்கையாக இருக்க முடியாது. ஒன்று கொள்கையை மாற்றுங்கள் அல்லது எழுதிக்கொடுப்பவரை மாற்றுங்கள்.
தம்பி என்னும் உறவு வேறு. கொள்கை என்பது வேறு. காங்கிரஸ் வரலாற்று பகைவன். நாடு ஏழ்மை, வறுமையில் சிக்கித் தவிப்பதற்கு காரணம் காங்கிரஸ். கச்சத்தீவை தூக்கி கொடுத்தது காங்கிரஸ். காவிரி தண்ணீர் பிரச்னைக்கு தொடர்ந்த வழக்கை இந்திரா சொன்னதை கேட்டு, ஆட்சி மீதான பயத்தில் திரும்பபெற்றவர் கருணாநிதி. காங்கிரஸ் ஆட்சியில் ஊழல். இந்தியை திணித்தது காங்கிரஸ். உலகெங்கும் மொழியின் அடிப்படையில் தான் கட்டமைக்கப்பட்டுள்ளது. ஒன்று விஜய் கொள்கையை மாற்ற வேண்டும். இல்லை எழுதி கொடுப்பவனை மாற்ற வேண்டும்.
கவர்னரே தேவையில்லை என்பது தான் எங்களின் நிலைப்பாடு. கவர்னரை வேண்டாம் என்று சொல்லும் விஜய், அதற்கான காரணத்தை சொல்வாரா? மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம், ஆந்திராவில் 20 தமிழர்கள் கொன்ற சம்பவங்கள் குறித்து விஜய் குரல் கொடுப்பாரா?
மஞ்சள் மங்களகரமானது. பச்சை துண்டு போட்டு போராடுவது புரட்சி இல்லையா? சிவப்பு துண்டு போட்டால்தான் புரட்சி செய்ய முடியுமா? அம்பேத்கர், ஈ.வெ.ரா.,வை படிங்க என்று விஜய் சொல்லும் போது, எனக்கு சிரிப்பு தான் வருகிறது. திராவிடம் என்பது தமிழா? சமஸ்கிருதமா?
விஜயுடன் திருமாவளவன் கூட்டணி வைக்க மாட்டார். என்னிலும் முதிர்ந்தவர். அனுபவமும், அரசியல் அறிவும் பெற்றவர் திருமாவளவன். அவருடைய மாணவர்கள் தான் நாங்கள். நானே இவ்வளவு நிதானமாக இருக்கும் போது, எங்கள் அண்ணன் எவ்வளவு ஆழமா சிந்திப்பார் என்று உங்களுக்கு தெரியும். எனக்கு பாடம் நடத்திய ஆசிரியர் அந்த தப்பை பண்ண மாட்டாரு. உறுதியாக சொல்ல முடியும்.
கூட்டத்தை வைத்து எதுவும் கணக்கு போடக் கூடாது. நயன்தாராவை பார்க்க 4 லட்சம் பேர் கூடினார்கள். விஜயகாந்திற்கு கூடாத கூட்டமா விஜய்க்கு கூடியிருக்கிறது?
இவ்வாறு சீமான் கூறினார்.