நாளை வகுப்புகள் புறக்கணிப்பு டாக்டர்கள் சங்கம் அறிவிப்பு
நாளை வகுப்புகள் புறக்கணிப்பு டாக்டர்கள் சங்கம் அறிவிப்பு
ADDED : நவ 29, 2024 01:33 AM
சென்னை:'மக்கள் நல்வாழ்வு துறையில், காலி பணியிடங்களை நிரப்பக்கோரி, நாளை முதல் மருத்துவ கல்லுாரிகள் புறக்கணிப்பு போராட்டம் நடத்தப்படும்' என, தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
சங்கத்தின் தலைவர் செந்தில், செயலர் ஸ்ரீனிவாசன் வெளியிட்ட அறிக்கை:
மகப்பேறு மரண தணிக்கை கூட்டத்தை, அத்துறை வல்லுனர்களை மட்டுமே வைத்து நடத்த வேண்டும். ஆய்வுக் கூட்டத்திற்கு, புதிய வரைமுறை வகுக்கப்பட வேண்டும். மகப்பேறு டாக்டர்கள் பற்றாக்குறை உள்ள நிலையில், தாய் மரணங்களை குறைக்க, வழிகாட்டுதல் முறை எந்த வகையிலும் உதவாது. எனவே, அவற்றை கைவிட வேண்டும்.
மக்கள் நல்வாழ்வு துறையில் உள்ள அனைத்து டாக்டர்கள் காலிப்பணியிடங்களும் உடனடியாக நிரப்பப்பட வேண்டும். நோயாளிகள் எண்ணிக்கை ஏற்ப, கூடுதல் மருத்துவப் பணியிடங்கள் உருவாக்கப்பட வேண்டும். விருப்ப ஓய்வு முறையில் செல்ல விரும்புவோருக்கு, உடனடியாக விருப்ப ஓய்வு வழங்க வேண்டும்.
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி, அனைத்து மருத்துவ கல்லுாரி மாணவர்களுக்கான வகுப்புகள், நாளை முதல் புறக்கணிக்கப்படும்.
'பயோமெட்ரிக்' பதிவு முறையில், டாக்டர்கள் தங்களது வருகையை பதிவு செய்ய மாட்டார்கள். வரும், 3ம் தேதி அனைத்து துறைகளிலும், அவசரமில்லாத அனைத்து அறுவை சிகிச்சைகள் ஒரு நாள் அடையாளமாக நிறுத்தப்படும். இந்த போராட்டங்களுக்கு பிறகு, சுமூகமான முடிவு எட்டப்படவில்லை என்றால், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து, 4ம் தேதி அறிவிக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.