குறைந்தபட்ச ஊதிய நிர்ணயம் டாக்டர்கள் சங்கம் எதிர்ப்பு
குறைந்தபட்ச ஊதிய நிர்ணயம் டாக்டர்கள் சங்கம் எதிர்ப்பு
ADDED : ஜூலை 29, 2025 07:28 AM
சென்னை : தனியார் மருத்துவமனைகளில், மருத்துவ அதிகாரிகள், பணியாளர்களுக்கான குறைந்தபட்ச ஊதிய நிர்ணயத்திற்கு, டாக்டர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.
மருத்துவ அதிகாரிகள், பணியாளர்களுக்கான குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயித்து, அதற்கான பட்டியலை, தமிழக தொழிலாளர் நலத்துறை வெளியிட்டு உள்ளது.
அதில், தனியார் மருத்துவமனைகளில், மருத்துவ அதிகாரிகளுக்கான குறைந்தபட்ச மாத ஊதியம், 14,875 முதல், 18,876 ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
இதற்கு, சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
அச்சங்கத்தின் செயலர் ரவீந்திரநாத் வெளியிட்டு உள்ள அறிக்கை:
தனியார் மருத்துவமனைக்கான குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயம் ஏற்புடையது இல்லை. 1,000 படுக்கைகளுக்கு மேல் உள்ள மருத்துவமனையில் கூட, குறைந்தபட்ச ஊதியமாக, 14,875 ரூபாய் நிர்ணயிப்பது எந்த வகையில் நியாயம்?
இதன் வாயிலாக, தொழிலாளர் விரோதம், டாக்டர்கள் விரோத போக்குடைய அரசு என்றெல்லாம் முத்திரை குத்தப்படும். 'கார்ப்பரேட்' மருத்துவமனைகளுக்கும், தனியார் மருத்துவமனைகளுக்கும் சாதகமாக, தமிழக தொழிலாளர் நலத் துறை செயல்படுவது வேதனை அளிக்கிறது.
இதுதான் டாக்டர்களின் வாழ்வாதாரத்தை, கவுரவத்தை, தொழிலாளர் நலனை காக்கும் லட்சணமா? தொழிலாளர் நலத்துறை என்பதற்கு பதில், முதலாளிகள் நலத் துறை என மாற்றி விடுவதே, அத்துறைக்கு பொருத்த மானதாக இருக்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

