மதுரை அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் ஸ்டிரைக் வாபஸ்
மதுரை அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் ஸ்டிரைக் வாபஸ்
ADDED : ஆக 06, 2011 04:58 PM
மதுரை: மதுரை அரசு ஆஸ்பத்திரியில் பட்டமேற்படிப்பு டாக்டர்கள் நடத்திய ஸ்டிரைக் வாபஸ் பெறப்பட்டது.
மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு நேற்று திருப்புவனத்தைச் சேர்ந்த தவமணி என்பவர் வந்தார். அனுமதிச்சீட்டு பெறுவது குறித்து விபத்து பிரிவில் விசாரித்தார். அவருக்கும் பணியில் இருந்த டாக்டர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. தவமணி போலீசில் கூறியதையடுத்து, டாக்டர்களுக்கும், போலீசாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இன்று காலையில் பட்ட மேற்படிப்பு டாக்டர்கள், பயிற்சி டாக்டர்கள் பணிக்கு செல்ல மறுத்தனர். பணிபாதுகாப்பு, போலீஸ் ஏட்டு ரமேஷ், எஸ்.ஐ., சங்கரலிங்கத்தை சஸ்பெண்ட் செய்ய கோரிக்கை விடுத்தனர். அரசு டாக்டர்கள் சங்க கிளை செயலாளர் சந்திரபிரகாசம் தலைமையில் நடந்த கூட்டத்தில், போராடும் டாக்டர்களுக்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றினர். போலீஸ் உதவி கமிஷனர் வெள்ளத்துரை ஆஸ்பத்திரியில் டாக்டர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். போலீசாரை இடமாறுதல் செய்வதாக உறுதியளித்தார். ஆஸ்பத்திரி கண்காணிப்பாளர் ராமானுஜம், நிலைய அதிகாரிகள் பிரகதீஸ்வரன், காந்திமதிநாதன், மூத்த டாக்டர்கள் சங்க தலைவர் கண்ணப்பன், அரசு டாக்டர்கள் சங்க மாநில செயலாளர் செந்தில் போலீஸ் கமிஷனர் கண்ணப்பனிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். போராடிய டாக்டர்கள் சமரசத்தை ஏற்கவில்லை. மாவட்ட கலெக்டர் சகாயம், டி.ஆர்.ஓ., முருகேஷ் ஆஸ்பத்திரிக்குச் சென்று டாக்டர்களிடம் பேசினர். இதையடுத்து மதியம் 2.30 மணிக்கு டாக்டர்கள் ஸ்டிரைக்கை வாபஸ் பெற்று பணிக்கு திரும்பினர்.