கார்ட்டூன்களை தொடர்ந்து பார்ப்பதால் 'அந்நியனாக' மாறும் பிஞ்சுகள்! பெற்றோரை எச்சரிக்கின்றனர் டாக்டர்கள்
கார்ட்டூன்களை தொடர்ந்து பார்ப்பதால் 'அந்நியனாக' மாறும் பிஞ்சுகள்! பெற்றோரை எச்சரிக்கின்றனர் டாக்டர்கள்
ADDED : ஜூலை 06, 2025 01:15 PM

கோவை: இன்றைய தினம் குழந்தைகள் பொழுதுபோக்கிற்காக, கார்ட்டூன் தொடர்களை மணிக்கணக்கில் பார்க்கின்றனர். அதன் பாதிப்பாக, நாளடைவில் அவர்கள் கார்ட்டூன் கேரக்டர்களாக மாறுவதால், மன தளவிலும், உடலளவிலும் பாதிக்கின்றனர். இவ்விஷயத்தில், பெற்றோர் கவனமாக இருக்க வேண்டுமென, டாக்டர்கள் எச்சரிக்கின்றனர்.
குழந்தைகளுக்கான கார்டூன் சேனல்கள் எண்ணிக்கை, கடந்த, 10 ஆண்டுகளில் அனைத்து மொழிகளிலும் அதிக எண்ணிக்கையில் வந்து விட்டன. அதுவும் இடைவெளியின்றி, பல தொடர்கள் ஒளிபரப்பாகின்றன. பல தொடர்களுக்கு குழந்தைகள் அடிமைகளாகி விடும் அளவுக்கு ஆர்வமாக பார்ப்பதை காண முடிகிறது.
தற்போது ஒளிபரப்பப்படும் கார்டூன் தொடர்கள், இந்தியாவில் மட்டுமின்றி, பல்வேறு நாடுகளில் தயாரானவையும் ஒளிபரப்பப்படுகிறது. சிறு வயதிலேயே காதல், வன்முறை போன்ற காட்சிகளும் இடம் பெறுகின்றன.
ஏ.ஏ.சி.ஏ.பி என்கிற அமெரிக்கா குழந்தைகள் மற்றும் பதின்பருவ வயதினருக்கான உளவியல் அகாடமி மேற்கொண்ட ஆய்வுகளில், அதிகளவில் கார்ட்டூன் பார்க்கும் குழந்தைகளின் நடத்தையில் மாற்றங்கள் இருப்பதாகவும், கார்ட்டூன் கேரக்டர் போல் தங்களை நினைத்து செயல்படுவதும் தெரியவந்துள்ளது.
இச்சூழலில், கோவையில் கார்ட்டூன் தொடர்களுக்கு அடிமையாகி, அவற்றில் வரும் கேரக்டர்கள் போல், தங்களை மாற்றி நடந்துகொண்ட மூன்று குழந்தைகளுக்கு, அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் 'கவுன்சிலிங்' கொடுத்துள்ளனர். எனவே, இவ்விஷயத்தில் பெற்றோர் கவனமாக இருக்க வேண்டும் என எச்சரித்துள்ளனர்.
அரசு மருத்துவமனை டி.இ.ஐ.சி., மைய குழந்தைகள் நல மருத்துவர் மோகன்ராஜ் கூறுகையில், ''இரண்டு வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் கார்டூன் பார்ப்பதை அனுமதிக்கக் கூடாது. அதற்கு மேற்பட்ட வயதினர், பாடம் சார்ந்த விஷயங்களை குறைவான நேரம் மட்டும் பார்க்க அனுமதிக்கலாம்.
தொடர்ந்து பார்த்தால், குழந்தைகளிடம் பாதிப்புகளை ஏற்படுத்தும். கார்ட்டூன் கேரக்டர் போல் நினைத்து செயல்படும் குழந்தைகளுக்கு சமீபத்தில் சிகிச்சை அளித்துள்ளோம். ஆட்டிசம் பாதிப்பு வரும் என்ற அதிகாரப்பூர்வ ஆராய்ச்சிகள் இல்லை. அதேநேரம், எதிர்மறை தாக்கம் குழந்தைகளிடம் ஏற்பட வாய்ப்புண்டு,'' என்றார்.