ஆவண ஒப்படைப்பு அடமான பத்திரம் பதிவு செய்வதில் வங்கிகளால் தாமதம்
ஆவண ஒப்படைப்பு அடமான பத்திரம் பதிவு செய்வதில் வங்கிகளால் தாமதம்
ADDED : செப் 19, 2026 01:51 AM
சென்னை: நேரடி வருகையின்றி, ஆவண ஒப்படைப்பு அடமான பத்திரங்களை பதிவு செய்வதில், புதிய நடைமுறையால் பாதிப்பு ஏற்படுவதாக, வங்கிகளில் கடன் வாங்குவோர் புகார் தெரிவிக்கின்றனர்.
வீடு, மனை விற்பனை பத்திரங்களை, சார் -- பதிவாளர் அலுவலகங்களுக்கு நேரடி வருகையின்றி பதிவு செய்வது, ஆக., 17 முதல் கட்டாயமாகி உள்ளது. இதையடுத்து, சொத்து வாங்குவோர், அதற்காக வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் கடன் பெறுகின்றனர்.
புகார் இதற்காக, சொத்தின் அசல் ஆவணங்களை, சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் ஒப்படைப்பதற்கான அடமான பத்திரம் பதிவு செய்யப்பட வேண்டும்.
இதுவரை, அடமான பத்திரத்தில் என்ன விபரங்கள் இருக்க வேண்டும் என்பதை, வங்கிகள் தெரிவிக்கும். அதன் அடிப்படையில், சொத்து வாங்கும் மக்களே பத்திரத்தை தயாரித்து, அதற்கான கட்டணம் செலுத்தி, பதிவுக்கு தாக்கல் செய்து வந்தனர்.
தற்போது, ஆவண ஒப்படைப்பு அடமான பத்திரம், ரசீது ஆவணங்கள், நேரடி வருகையில்லா முறையில், செப்., 15 முதல் பதிவு செய்வது கட்டாயமாகி உள்ளது.
இதில், வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் நேரடியாக அல்லது முகவர் வாயிலாக, இதற்கான பத்திரங்களை, 'ஆன்லைன்' முறையில் தாக்கல் செய்யலாம்.
பழைய முறை போன்று சொத்து வாங்குவோர், இந்த பத்திரங்களை தயாரிக்க, தாக்கல் செய்ய முடியாது. வங் கிகளுக்கு இந்த பொறுப்பு அளிக்கப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பான பணிகள் தாமதமாவதாக, சொத்து வாங்கும் மக்கள் புகார் தெரிவித்தனர்.
இது குறித்து, கடன் வாங்குவோர் கூறியதாவது:
சொத்து வாங்கும்போது, அதற்கான கிரைய பத்திரம் பதிவாகும் நாளிலேயே, கடனுக்கான ஆவண ஒப்படைப்பு அடமான பத்திரமும் பதிவு செய்யப்பட்டு வந்தது. தற்போது நேரடி வருகையில்லாத முறை கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.
இதில், வங்கிகளே பத்திரத்தை தயாரித்து, பதிவுக்கு தாக்கல் செய்ய வேண்டும். ஆனால், பெரும்பாலான வங்கிகள், இதற்கான ஆட்களை நியமிக்காததால், இது தொடர்பான பத்திரம் பதிவாவது தாமதமாகிறது. இதனால், வீடு, மனை வாங்குவதற்கான பத்திரத்தை பதிவு செய்வதும் தாமதமாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
பயிற்சி இது குறித்து, பதிவுத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
ஆவண ஒப்படைப்பு அடமான பத்திரங்களை, விரைவாக தாக்கல் செய்வது குறித்து வங்கிகள், நிதி நிறுவனங்களுக்கு முறையாக பயிற்சி அளித்து இருக்கிறோம். இதில் ஏற்படும் சந்தேகங்களை தீர்க்க, தனி கட்டுப்பாட்டு அறை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறி னார்.
