ADDED : ஆக 18, 2025 05:47 PM

சென்னை: தமிழக அமைச்சர் ஐ.பெரியசாமி தொடர்புடைய இடங்களில் நடந்த சோதனையில் சொத்து மற்றும் முதலீடு குறித்த ஆவணங்கள், டிஜிட்டல் சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக திண்டுக்கல் துரைராஜ் நகர் 2வது தெரு என்ற முகவரியில் வசிக்கும் அமைச்சர் ஐ.பெரியசாமி, வள்ளலார் நகரிலுள்ள அவரது மகள் இந்திராணி, மகனும் பழநி தொகுதி எம்.எல்.ஏ.,வுமான செந்தில்குமார் வீடுகள், ஸ்பின்னிங் மில்கள், சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள எம்.எல்.ஏ.,விடுதி உள்ளிட்ட 6 இடங்களில் ஒரே நேரத்தில் நேற்று முன்தினம் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அவரது மகள் மற்றும் மகன் வீடுகளிலும் நேற்றும் சோதனை நடத்தப்பட்டது.
இந்நிலையில், அமலாக்கத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: முறைகேடாக சொத்துக் குவித்த வழக்கில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் சட்டத்தின் கீழ் அமைச்சர் பெரியசாமி, அவரது மகன் ஐ.பி.செந்தில்குமார் உள்ளிட்டோர் தொடர்புடைய சென்னை மற்றும் திண்டுக்கல்லில் பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. இதில் சொத்து மற்றும் முதலீடு குறித்த ஆவணங்கள், டிஜிட்டல் சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவ்வாறு அந்த பதிவில் கூறப்பட்டு உள்ளது.