சாக்கடையில் இருந்து சந்தனமா வரும்?: அமைச்சருக்கு சன்னியாசிகள் கண்டனம்
சாக்கடையில் இருந்து சந்தனமா வரும்?: அமைச்சருக்கு சன்னியாசிகள் கண்டனம்
ADDED : ஏப் 13, 2025 02:50 AM

பொள்ளாச்சி: ''அமைச்சர் பொன்முடியை பதவியில் இருந்து நீக்க வேண்டும். இல்லையெனில், ஒன்றுகூடி போராட்டத்தில் ஈடுபடுவோம்,'' என, சன்னியாசிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழக அமைச்சர் பொன்முடி, சைவம், வைணவம் குறித்து ஆபாசமாக பேசிய பேச்சுக்கு பல தரப்பில் இருந்து கண்டன குரல் எழுந்துள்ளது. பொள்ளாச்சியை சேர்ந்த சுவாமிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இழிவான செயல்
தத்துவ ஞானசபை மற்றும் அகில பாரதிய சன்னியாசிகள் சங்கம் ஒருங்கிணைப்பாளர் சுவாமி வேதாந்த ஆனந்தா அளித்த பேட்டி:
வனத்துறை அமைச்சர் பொன்முடி சனாதன தர்மம், நம்பிக்கையைப் பற்றி மிக இழிவான முறையில் பேசினார். அரசியல் செய்வோர், நாட்டு மக்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காணவும், தேவைகளை நிறைவேற்றவும் கவனம் செலுத்த வேண்டும்.
அந்த கோணத்தில் இல்லாமல், மக்களுடைய மத நம்பிக்கை, ஜாதி உணர்வுகள், பிரிவினை வாதங்களை துாண்டிவிடும் இழிவான செயலில் ஈடுபடக்கூடாது.
முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் பொன்முடியை, கட்சியின் துணைப் பொதுச்செயலர் பதவியில் இருந்து நீக்கியதை வரவேற்கிறோம். அதேபோன்று அமைச்சர் பதவியில் இருந்தும் அவரை நீக்க வேண்டும்.
இல்லையெனில், தமிழகம் முழுதும் உள்ள சன்னியாசிகள் ஒன்றுகூடி, அந்தந்த மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம்.
சனாதன தர்மத்தை எத்தனை முறைதான் இழிவுபடுத்துவீர்? இனியும் ஹிந்து மதம், சனாதன தர்மம் குறித்து இழிவாகப் பேசினால் பொறுத்துக்கொள்ள முடியாது. இனி இதுபோல நடந்தால் பதிலடி கொடுக்கப்படும்.
போராட்டம் வெடிக்கும்
பெண்களை தெய்வமாக மதித்து வழிபடுகிறோம். பெண்கள், சமயம் இரண்டையும் இழிவுபடுத்தினால் பொறுக்க முடியாது. அமைச்சர் பதவியில் இருந்து அவரை நீக்காவிட்டால் போராட்டம் வெடிக்கும்.
இவ்வாறு, அவர் கூறினார்.
ஆனைமலை ஆர்ஷ வித்யா பீடம் பூஜ்ய ஸ்ரீ ததேவாநந்த சுவாமிகள் கூறியதாவது:
அநாகரிமான ஆட்சி நடக்கும்போது, அநாகரிகமான அமைச்சரிடம் இருந்து அநாகரிகமான வார்த்தைதான் வரும். அமைச்சரின் பேச்சுக்கு கண்டனம் தெரிவிக்கிறோம். சாக்கடையில் இருந்து கங்கை நீர் வராது; சாக்கடையால் தமிழகம் சாக்கடையாகிறது.
ஹிந்து சனாதனம் குறித்து, யார் வேண்டுமென்றாலும், எது வேண்டுமென்றாலும் பேசும் நிலை உள்ளது. மக்கள் அமைதியாக இருப்பதால், இதுபோன்று அமைச்சர் உள்ளிட்டோர் பேசி வருகின்றனர்.
அசுரத்தனமான, அரக்கத்தனமான இந்த ஆட்சியை ஒழித்தால் இதுபோன்ற செயல்பாடுகள் நிற்கும். ஒருவரின் பேச்சு, அவரது தரத்தைக் காட்டுகிறது. உள் இருப்பதுதான் வெளியே வரும்; உள்ளே சாக்கடை இருந்தால் வெளியே சந்தனமா வரும்? இனியாவது மக்கள் சிந்தித்தால் மட்டுமே இந்த நிலை மாறும்.
இவ்வாறு கூறினார்.