பைலட்களின் பணி நேரம் மாறுமா? :அடுத்த ஆண்டு நடைமுறைக்கு வரும்
பைலட்களின் பணி நேரம் மாறுமா? :அடுத்த ஆண்டு நடைமுறைக்கு வரும்
ADDED : ஆக 17, 2011 12:26 AM
பைலட்களின் பணி நேரத்தை கண்காணிக்கும் ஒரு புதிய திட்டத்தை, சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் அறிமுகப்படுத்துகிறது.
அடுத்த ஆண்டு பிப்ரவரி முதல் இத்திட்டம் செயல்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பைலட்கள் மற்றும் விமான ஊழியர்களின் பணி நேரம் குறித்த சர்ச்சை, கடந்த சில ஆண்டுகளாக நிலவி வருகிறது. பைலட்கள் எத்தனை மணிநேரம் பணிபுரிய வேண்டும், அடுத்தடுத்து வரும் பணிக்கு இடையேயான ஓய்வு நேரம் எவ்வளவு என்பதற்கான விதிமுறைகள் உள்ளன.
உள்நாட்டு, பன்னாட்டு விமான சேவையில், பைலட்களுக்கான பணி நேரம் மாறுபடும். விமானத்தின் ஊழியர்களின் எண்ணிக்கை இரவு, பகல், தூரம் ஆகியவற்றைப் பொறுத்து, பைலட்களின் பணிநேரம் தீர்மானிக்கப்படுகிறது. இதற்காக, பைலட்களுக்கு அதிக பணிச்சுமை கொடுப்பதால், விபத்து ஏற்படும் அபாயம் உருவாகிறது. மேலும், விமானங்களும் தாமதமாகின்றன. இந்நிலையில், பைலட்களின் பணி நேரத்தை ஒழுங்குபடுத்தும் விதமாக, ஒரு புதிய திட்டத்தை சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் அறிவித்துள்ளது. அதன்படி, ஒவ்வொரு விமான நிறுவனமும் அவற்றின் பைலட்களின் பணிநேரம் குறித்த முழு தகவல்களையும், கம்ப்யூட்டர் நெட்வொர்க் மூலம் சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகத்திற்கு உடனுக்குடன் தர வேண்டும். இந்த தகவல்களை, சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் தொடர்ந்து கண்காணிக்கும். சோதனை முயற்சிக்குப் பிறகு, அடுத்த ஆண்டு பிப்ரவரியில் புதிய திட்டம் அமலுக்கு வரும் என்று கூறப்பட்டுள்ளது.
இப்புதிய திட்டத்திற்கு பைலட்கள் தரப்பில் இருந்து வரவேற்பு கிடைத்துள்ளது.''விமான ஊழியர்களின் பணி நேரத்தில் விதிமீறல் ஏற்படாமல் கண்காணிக்க வேண்டியது, அந்தந்த விமான நிறுவனத்தின் பொறுப்பு. இத்திட்டம், விமான ஊழியர்களின் பணிநேரம் குறித்து சுய சோதனை செய்து கொள்வதற்கு உதவும். பைலட்கள், பணிநேர விதிமுறைகளை முறையாக கடைபிடிக்கின்றனர். ஆனால், விமான நிறுவனங்கள், அவர்களுக்கு கூடுதல் பணிச் சுமையை அளித்து வருகின்றன. இதன் மூலம், விதிமுறைகளை மீறும் விமான நிறுவனங்கள் கண்டறியப்படும்,'' என்று, மூத்த பைலட்கள் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். ஆனால், ஒரு சில பைலட்கள் புதிய திட்டத்தை விமர்சனம் செய்துள்ளனர்.
அவர்கள் கூறுகையில்,'இது வரவேற்கக் கூடிய திட்டம் தான் என்றாலும், இதில் மேலும் பல முக்கிய மாற்றங்களைச் செய்ய வேண்டும். பைலட்களின் ஒரு வாரத்திற்கான பணிநேரம் 30ல் இருந்து 35 மணிநேரமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதே வேளையில், ஒரு மாதத்திற்கான பணிநேரம் 125 என்றும், ஒரு ஆண்டிற்கான பணிநேரம் 1,000 மணி நேரம் என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 1992ம் ஆண்டு விதிமுறைப்படி, பைலட்களின் பணிநேரம் 9 மணிநேரம் தான். ஆனால், அதை 10 மணி நேரமாக உயர்த்த வேண்டும் என்று, சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் நிர்ணயித்துள்ளது. இது மாற்றப்பட வேண்டும்' என்றனர்.
எஸ்.உமாபதி