UPDATED : மார் 16, 2024 04:34 AM
ADDED : மார் 16, 2024 12:00 AM

நாகர்கோவில்:''தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை பெறுவதில் எவ்வித தவறும் இல்லை,'' என, கன்னியாகுமரியில் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறினார்.
அவர் கூறியதாவது:
பிரதமர் மோடிக்கும் குமரி முனைக்கும் நெருங்கிய உறவு இருக்கிறது. மிக முக்கியமானது. நம் மொழியில் பேச முடியவில்லை என்ற வருத்தம் பிரதமருக்கு இருந்தது ஏ. ஐ., தொழில்நுட்பம் மூலம் பிரதமர் பேசுவதை தமிழில் அவர் பேசுவது போன்று தயார் செய்து எக்ஸ் வலைதளத்தில் உடனடியாக வருவதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். தொன்மையான தமிழ் மொழிக்கு மரியாதை செய்ய வேண்டும் என்ற நோக்கில் இம்முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி தொகுதியில் 2014 --19 காலகட்டங்களில் பொன் ராதாகிருஷ்ணன் மத்திய அமைச்சராக இருந்த போது கொண்டு வரப்பட்ட பல்வேறு திட்டங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு செயல்பாட்டுக்கு வரவில்லை. அப்போது ஒதுக்கிய நிதி கூட இன்னும் முழுமையாக செலவு செய்யப்படவில்லை.
தமிழகத்தில் பா.ஜ., தலைமையில் கூட்டணி முடிவாகி கொண்டுள்ளது. எந்த நேரமும் அறிவிக்கப்படலாம். தமிழக வேட்பாளர் பட்டியல் விரைவில் அறிவிக்கப்படும். சமத்துவ மக்கள் கட்சியை இணைத்த அதன் தலைவர் சரத்குமார் மிக முக்கியமானவர். தொகுதி ஒதுக்குவது குறித்து தலைமை முடிவு செய்யும்.
அவரை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து மூத்த தலைவர்களுடன் ஆலோசித்து வருகிறோம். எங்கு போட்டியிடுவது என்பது குறித்து தலைமை முடிவெடுக்கும். அண்ணாமலை, பொன் ராதாகிருஷ்ணன் போட்டியிடுவது குறித்து கட்சித் தலைமையே முடிவெடுக்கும்.
கருத்துக்கணிப்பை வெளியிட்டால் அதற்கு தொடர்ந்து எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். களத்தை பார்த்து விஞ்ஞான முறையில் தமிழக ஊடகங்களும் தேசிய ஊடகங்களும் கருத்துக்கணிப்பை வெளியிட்டுள்ளன. இது பா.ஜ., தமிழகத்தில் வளர்ச்சி அடைந்துள்ளதை காட்டுகிறது.
அகில இந்திய அளவில் 400 தொகுதிகளுக்கு மேல் பா.ஜ., வெற்றி பெறும் என கருத்துக்கணிப்புகள் வந்தாலும் தமிழகத்தில் ஐந்து தொகுதிகள் மட்டுமே கிடைக்கும் என கூறப்படுகிறது. தற்போது தான் அலை உருவாகி இருக்கிறது.
ஐந்து என்பது குறைவான எண்ணிக்கை தான். தேர்தல் தேதி நாளை அறிவிக்கப்பட உள்ளது. தேர்தல் சூடு பிடிக்கும் போது பிரதமர் மோடிக்கான வாக்குகள் பெருமளவு கிடைக்கும். மிகப்பெரிய வெற்றியை பெறுவோம்.
ஒரு மாநிலத்தில் ஆட்சி செய்பவர்கள் ரூ.ஆயிரம் கோடிக்கு மேல் தேர்தல் பத்திரம் மூலம் நன்கொடை பெற்றுள்ளனர். பா.ஜ., 18 மாநிலங்களில் ஆட்சி செய்கிறது. தி.மு.க., 87 சதவீதம் நிதியை தேர்தல் பத்திரங்கள் மூலம் பெற்றுள்ளது. தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை பெறுவதில் எந்த தவறும் இல்லை.
எவ்வாறு தேர்தல் நிதி அரசியல் கட்சிகள் பெறலாம் என்பதற்கான கோட்பாடுகளை நீதிமன்றம் அறிவிக்கலாம். அதனை ஆலோசனை செய்து ஆட்சியில் இருப்பவர்கள் நடவடிக்கை எடுப்பார்கள். தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை பெற்றதற்கும் புலனாய்வு அமைப்புகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.

