நன்கொடை, லஞ்சம் வாங்காதீங்க: சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு கவர்னர் அறிவுரை
நன்கொடை, லஞ்சம் வாங்காதீங்க: சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு கவர்னர் அறிவுரை
UPDATED : ஏப் 25, 2025 04:35 AM
ADDED : ஏப் 25, 2025 01:11 AM

சென்னை: “பொதுமக்களிடம் இருந்து நன்கொடைகள் அல்லது லஞ்சம் பெறுவது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது,” என, சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு, கவர்னர் ரவி அறிவுரை வழங்கினார்.
சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களை கவுரவப்படுத்தும் நிகழ்ச்சி, சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் நேற்று நடந்தது. மத்திய அரசு பணியாளர் தேர்வாணையமான யு.பி.எஸ்.சி.,யின் நேர்முகத் தேர்வுக்கு முன், அம்மாணவர்களுக்கு கவர்னர் ரவி கடந்த மார்ச்சில் பயிற்சி அளித்தார்.
அதில், வெற்றி பெற்ற ஒன்பது மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்க, நேரில் அழைத்திருந்தார். அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து, ஒன்பது தொகுதிகள் உடைய, 'கம்பராமாயணம்' புத்தகங் களை பரிசாக வழங்கினார்.
கவனமாக இருங்கள்
பின், மாணவர்களிடம் கவர்னர் பேசியதாவது: யு.பி.எஸ்.சி., தேர்வில் வெற்றி பெறுவது எளிதல்ல. உங்களுடைய வெற்றிக்கு உங்கள் பெற்றோர் முக்கிய காரணம். வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்கும்போது, மிகக் கவனமாக இருங்கள்.
இந்திய குடிமைப்பணி பயணத்தில், கடுமையான சூழ்நிலைகளை சந்திக்க நேரிடும். அந்த சூழ்நிலையில், உங்கள் வாழ்க்கைத் துணை ஒத்துழைப்பு தரக்கூடியவராக இருக்க வேண்டும். உங்கள் வாழ்க்கைத் துணை, உங்கள் வேலை பற்றிய புரிதல் உள்ளவராக இருக்க வேண்டும். பல சவாலான, கடினமாக சூழ்நிலைகளை சந்திக்க நேரிடும். அதற்கு உறுதுணையாக இருக்கும் துணையை தேர்வு செய்யுங்கள்; இல்லையெனில் நெருக்கடியை சந்திக்க நேரிடும்.
அதேபோல, உங்கள் உடல்நலம் முக்கியம். தற்போது, இளம்வயதிலேயே சர்க்கரை நோய், உடல் பருமன், ரத்த அழுத்தம் போன்ற நோய்கள் ஏற்படுகின்றன. ஒரு அதிகாரியாக, நம் உடலை நாம் பேணி காக்க வேண்டும். உடல்நல பாதிப்புகளுக்கு அப்பாற்பட்டவர்களாக நாம் இருக்க வேண்டும்.
நீங்கள் தனிமனிதர் இல்லை; உங்களை நம்பி பலர் உள்ளனர். தினமும் ஒரு மணி நேரம் யோகா, உடற்பயிற்சி செய்யுங்கள். உங்களுக்கு சிறந்த ஊதியத்தை, மத்திய அரசு தருகிறது. சேமிக்கும் பழக்கத்தை மேற்கொள்ளுங்கள். பொதுமக்களிடம் இருந்து நன்கொடை அல்லது லஞ்சம் பெறுவது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது.
பணத்தை சேமியுங்கள்
இப்போதிருந்தே பணத்தை அதிகமாக சேமிக்க கற்றுக்கொள்ளுங்கள். என் ஆரம்ப சம்பளம், 720 ரூபாய். ஆனால், இப்போது உங்களின் ஆரம்ப சம்பளம், 1 லட்சம் ரூபாயாக இருக்கும். இன்னும் நான்கு ஆண்டுகளில் அது அதிகரிக்கும்.
தேர்ச்சி பெற்றுவிட்டால், நமக்கு எல்லாம் தெரிந்து விட்டது என நினைக்காமல், தொடர்ந்து படிக்க வேண்டும். இலக்கியம் படிப்பது உங்கள் மன உறுதியை அதிகரிக்கும். புத்தகம் படிப்பது உங்கள் அறிவையும், செயலையும் மேம்படுத்தும்.
சில ஆண்டுகளுக்குப் பின், உங்கள் மேலதிகாரிகள் உங்களை கவனிப்பர். அப்போது, உங்கள் திறமையை வைத்து, வேறு முக்கிய துறைகளில் பயன்படுத்த நினைப்பர். அதற்கு, வாசிப்பு நல்வாய்ப்பாக இருக்கும்.
நாட்டைப் பற்றி அதிகமாக படியுங்கள்; தெரிந்து கொள்ளுங்கள். இந்தியா, 1,000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது; கலாசாரத்தால் பின்னி பிணைந்தது. அது தொடர்பான, வரலாற்றை அறிய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.