கவர்னரை மாற்ற வேண்டாம்: மத்திய அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
கவர்னரை மாற்ற வேண்டாம்: மத்திய அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
ADDED : ஜன 18, 2025 07:12 PM

சென்னை: '' நான் விமர்சிக்கிறேன் என்பதற்காக கவர்னரை மாற்ற வேண்டாம் என மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கிறேன்,'' என தி.மு.க.,வின் சட்டத்துறை மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
இம்மாநாட்டில் அவர் பேசியதாவது: ஒரே மதம், ஒரே மொழி ஒரே பண்பாடு, ஒரே உடை ஒரே உணவு என ஒற்றை பண்பாட்டை நோக்கி நாட்டை நகர்த்த பா.ஜ., பார்க்கிறது. இதற்காகதான் ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை கொண்டு வந்துள்ளது. காலப்போக்கில் ஒரே அரசு என்ற நிலையை உருவாக்கி மாநிலங்களை அழிக்க முயற்சி செய்கிறது.
பா.ஜ.,வை பொறுத்தவரை குறுகிய செயல்திட்டமாக இருக்காது. நீண்ட கால செயல்திட்டமாக தான் இருக்கும். தற்போது ஒரே நாடு ஒரே தேர்தல் என கூறுபவர்கள், ஒரே தேர்தல் என்ற நிலையை உருவாக்க நினைக்கின்றனர். இது ஒற்றையாட்சிக்கு தான் வழிவகுக்கும். ஒரே தனி மனிதருக்கு தான் அதிகாரத்தை கொண்டு சேர்க்கும்.இது பா.ஜ.,விற்கு கூட நல்லது அல்ல.பிரதமர் மோடி சர்வாதிகாரியாக ஆக்கத் தான் சட்டம் பயன்படும்
பா.ஜ., அதற்கு மூளையாக செயல்படும் அமைப்புகள் விரிக்கும் வலைகளில், அரசியல் காரணத்திற்காக ஆதரவு அளிக்கும் கூட்டணி கட்சிகள் விழுந்து விடக்கூடாது. இந்த சட்டத்திற்கு ஆதரவு தரக்கூடாது.பா.ஜ., அரசை ஆதரிப்பது கூட்டணி கட்சிகளின் தனிப்பட்ட விருப்பம். கூட்டாட்சி தத்துவத்திற்கு முரணான சட்டங்களை ஆதரிக்கக்கூடாது. கூட்டாட்சியை காக்க 'ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை இறுதி வரை எதிர்த்து ஆக வேண்டும்.
தன்னுடைய செயல்திட்டங்களுக்கு இடையூறாக இருப்பவர்களுக்கு எதிரான கருத்துகளை மெதுவாக சமூகத்தில் விதைக்க பார்க்கின்றனர். அதற்கு துணையாக பல எடுபிடிகளை பேச வைப்பார்கள். மீடியாக்கள் மூலம் பொய் செய்திகளை பரப்புவார்கள். விவாதங்களை கட்டமைப்பார்கள். அளவில்லாமல் அவதூறுகளை அள்ளி இறைப்பார்கள். பச்சையான பொய்களால், கொச்சைப்படுத்துவார்கள். பா.ஜ.,வின் வாட்ஸ் அப் பல்கலை தீயாக வேலை செய்யும். இதை தாண்டி தான் போராட வேண்டும். வெற்றி பெற வேண்டும்.
இப்போது கூட இந்திய நாட்டையும், அரசியலமைப்பையும் மக்களாட்சியை மாற்ற வேண்டும் என தி.மு.க., போராடி கொண்டிருக்கிறது. ஆனால், நம்மை அரசியலமைப்புக்கு எதிரானவர்களாக மாற்றுவதற்கான முயற்சியில் கவர்னர் ரவி இறங்கி உள்ளார். நான் கவர்னரை விமர்சிக்கிறேன் என்பதற்காக அவரை மாற்றிவிட வேண்டாம் என மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கிறேன். அவர் பேசப் பேசத்தான் நாட்டில் பா.ஜ., அம்பலப்படுகிறது. திராவிட கொள்கைகள் மேலும் மேலும் மக்களிடம் சேர்கிறது. அவர் பேசப்பேசத் தான் மாநில சுயாட்சியின் முழக்கத்தின் உரிமைகள் புரிகிறது. இன்றைய மாநாட்டில், கட்சியினர், திராவிட இயக்கங்கள் பேசுவதற்கு தூண்டுதலாக இருந்தவர் கவர்னர்.
பண்பாட்டு எதிரிகளை கொள்கை எதிரிகளை பார்த்து கொண்டு உள்ளோம். இன்றைய எதிரிகள் கருத்தியல் மோதலுக்கு தயாராக இல்லை. அவர்கள் கருத்தியலாக பேசினால் வெற்றி பெற முடியாது. அதனால் தான் அவதூறுகளை ஆயுதங்களாக எடுக்கின்றனர். அந்த துரோக கூட்டங்களை துடைத்து எறிய வேண்டும். அரசியலமைப்பை பாதுகாக்கும் கடமை, நாடு முழுதும் சமூக நீதியை பாதுகாக்கும் கடமை நமக்கு உண்டு. இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.
இம்மாநாட்டில், கவர்னருக்கு எதிராகவும், ஒரே நாடு ஒரே தேர்தல் முறைக்கு எதிராகவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.