ஆய்வு செய்து குழப்பத்தை உண்டாக்க வேண்டாம்: திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் உயர் நீதிமன்றம் கருத்து
ஆய்வு செய்து குழப்பத்தை உண்டாக்க வேண்டாம்: திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் உயர் நீதிமன்றம் கருத்து
UPDATED : ஏப் 24, 2025 03:13 AM
ADDED : ஏப் 23, 2025 11:28 PM

மதுரை:மதுரை, திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பான வழக்கில், 'ஆய்வு செய்து குழப்பத்தை உண்டாக்க வேண்டாம். இதில் என்ன நடக்கிறது என எங்களுக்கு தெரியும்,' என, கருத்து வெளியிட்ட உயர் நீதிமன்ற மதுரைக் கிளை இறுதி விசாரணைக்காக ஏப்., 30க்கு ஒத்திவைத்தது.
ஹிந்து மக்கள் கட்சியின் மதுரை மாவட்ட தலைவர் சோலை கண்ணன் தாக்கல் செய்த பொது நல மனு:      திருப்பரங்குன்றம் மலையின் உரிமையாளர், சுப்பிரமணியசுவாமி கோவில் நிர்வாகம். மலை மீதுள்ள சுல்தான் சிக்கந்தர் தர்கா, அதன் முன்புறமுள்ள கொடிமரம், நெல்லித்தோப்பு, அங்கிருந்து தர்காவிற்கு செல்லும் படிக்கட்டு, புதுமண்டபம் தவிர, மலையிலுள்ள பிற அனைத்து பகுதிகளும், சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சொந்தமானது என, ஆங்கிலேயர் ஆட்சியின்போது நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிலர், மலை மீது ஆடு, மாடு, கோழி பலியிட கூறி, மலையை சிக்கந்தர் மலையாக மாற்ற முயற்சிப்பதற்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
திருப்பரங்குன்றம் ஒசீர்கான், 'மலையிலுள்ள தர்கா மற்றும் பள்ளிவாசல் நிர்வாகத்தில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தலையிடக்கூடாது. அப்பகுதியில் சீரமைப்பு, கட்டுமானப் பணி மேற்கொள்வதை தடுக்கக்கூடாது என உத்தரவிட வேண்டும்,'' என்று மனு செய்தார்.
நீதிபதிகள் ஜெ.நிஷாபானு, எஸ்.ஸ்ரீமதி அமர்வு விசாரித்தது.விவாத விபரம் வருமாறு:
தர்கா நிர்வாகம் தரப்பு: தர்கா அமைந்துள்ள பகுதி மற்றும் அதற்கு செல்லும் பாதை, நெல்லித்தோப்பு தர்கா நிர்வாகத்திற்கு சொந்தமானது. மலையின் ஏனைய பகுதிகள் கோவில் நிர்வாகத்திற்கு சொந்தமானது என மதுரை சார்பு நீதிமன்றம் 1923ல் உத்தரவிட்டது. இதை ஆங்கிலேயர் ஆட்சியின்போது லண்டன் பிரிவி கவுன்சிலின் 5 நீதிபதிகள் அமர்வு உறுதி செய்தது.  சோலைகண்ணன், ராமலிங்கம் தரப்பு: பிரிவி கவுன்சிலின் உத்தரவு தொடர்பாக மாறுபட்ட கருத்து எதுவும் இல்லை. சிலர் 2025 ஜனவரியில் ஆடு, கோழி பலியிட முயற்சித்தனர். சமூக வலைத்தளத்தில் தவறான கருத்துக்களை பரப்பினர்.
இதனால் பிரச்னை உருவானது.தமிழக அரசு தரப்பு: வழிபாட்டுத் தலங்கள் சட்டம் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. எந்த ஒரு வழிபாட்டுத் தலத்தையும் மறு உத்தரவு வரும்வரை ஆய்வு செய்ய நீதிமன்றங்கள் அனுமதிக்கக்கூடாது என, உத்தரவிட்டு உள்ளது.
மத்திய அரசு தரப்பு: மலையில் ஆடு, கோழி பலியிட்டதற்கான சான்றுகள் இல்லை. மலையை ஆய்வு செய்ய அனுமதிக்க வேண்டும்.நீதிபதிகள் அளித்த உத்தரவு: ஆய்வு செய்து குழப்பத்தை உண்டாக்க வேண்டாம். அனைத்து கடவுள்களும் பாதுகாப்பாக உள்ளனர். மலை விவகாரத்தில் என்ன நடக்கிறது என எங்களுக்கு தெரியும். இறுதி விசாரணைக்காக ஏப்., 30க்கு வழக்கு ஒத்தி வைக்கப்படுகிறது. அன்று மனுதாரர்கள், எதிர்மனுதாரர்கள் தரப்பில் எழுத்துப்பூர்வ வாதங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.

