'அசாமை கோட்டை விட்டுடாதீங்க' :பா.ஜ.,வுக்கு ஆர்.எஸ்.எஸ்., எச்சரிக்கை
'அசாமை கோட்டை விட்டுடாதீங்க' :பா.ஜ.,வுக்கு ஆர்.எஸ்.எஸ்., எச்சரிக்கை
UPDATED : பிப் 24, 2026 05:58 AM
ADDED : பிப் 24, 2026 01:45 AM

சென்னை: 'மற்ற மாநிலங்களில் அதிக கவனம் செலுத்தி, அசாம் தேர்தலில் கோட்டை விட்டு விட வேண்டாம்' என, பா.ஜ.,வுக்கு, ஆர்.எஸ்.எஸ்., எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வரும் ஏப்ரலில் தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் ஆகிய ஐந்து மாநிலங்களில், சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. இதில், அசாமில் பா.ஜ., ஆட்சியும், புதுச்சேரியில் பா.ஜ., கூட்டணி ஆட்சியும் நடக்கிறது.
தேர்தல் நடக்கும் ஐந்து மாநிலங்களில் மேற்கு வங்கம், தமிழகம், புதுச்சேரியில், பா.ஜ., மேலிடம் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. ஐந்து மாநில சட்டசபை தேர்தலில் தீவிரமாக களப் பணியாற்றுவது என, ஆர்.எஸ்.எஸ்., உள்ளிட்ட சங் பரிவார் அமைப்புகள் முடிவு செய்துள்ளன.
இதற்காக, பா.ஜ.,வுடன் பலகட்ட ஆலோசனை கூட்டங்களை நடத்தி வருகின்றன. பா.ஜ., மேலிடத் தலைவர்களுடன் நடந்த ஆலோசனை கூட்டத்தில், ஆர்.எஸ்.எஸ்., முக்கிய நிர்வாகி ஒருவர் கூறியுள்ளதாவது: தேர்தல் நடக்கும் ஐந்து மாநிலங்களும் முக்கியமானவைதான். அதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், அசாமில் வெற்றி பெற வேண்டியது மிக மிக முக்கியம். அசாம் மக்கள் தொகையில் ஹிந்துக்களின் எண்ணிக்கை, 60 சதவீதத்திற்கும் கீழ் வந்து விட்டது.
வங்க தேசத்தில் இருந்து ஊடுருவி வந்தவர்களால், அசாம் இன்னொரு காஷ்மீராக மாறும் அபாயம் உள்ளது. அசாமில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஊடுருவல் அதிகரிக்கும். அதன் தாக்கம் அண்டை மாநிலங்களில் எதிரொலிக்கும்.
அது மட்டுமல்லாது, காங்கிரசுக்கு மறுவாழ்வு கொடுத்தது போலாகி விடும். எனவே, மற்ற மாநிலங்களுக்கு கொடுக்கும் உழைப்பை விட, அசாமிற்கு அதிகம் கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் அறிவுறுத்தியுள்ளார்.
அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா 'அசாம் மக்கள் தொகையில் ஏற்பட்டுள்ள மாற்றம் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும்' என, தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகிறார்.
அதைத் தொடர்ந்து, அசாம் தேர்தலில் பா.ஜ,வுக்கு துணையாக, ஆர்.எஸ்.எஸ்., உள்ளிட்ட சங்பரிவார் அமைப்புகள் தீவிரமாக களமிறங்கியுள்ளன. காங்கிரசில் உள்ள முக்கிய தலைவர்கள், நிர்வாகிகளுக்கு, பா.ஜ.,வும் வலை விரித்துள்ளது.
வட மாநிலங்களில் உள்ள தனது நிர்வாகிகள், தொண்டர்களை மேற்கு வங்கம், அசாம் தேர்தல் பணிகளில் ஈடுபடுமாறு, சங் பரிவார் அமைப்புகள் கேட்டுக் கொண்டுள்ளதாக, பா.ஜ., நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

