'தி.மு.க., அறக்கட்டளையையும், துரைமுருகனையும் இணைக்காதீர்கள்'
'தி.மு.க., அறக்கட்டளையையும், துரைமுருகனையும் இணைக்காதீர்கள்'
ADDED : செப் 19, 2025 01:56 AM
சென்னை:'அமைச்சர் துரை முருகன் மீதான வழக்கு விசாரணையில், தி.மு.க., மற்றும் அதன் அறக்கட் டளை கணக்குகளை மையப் படுத்துவது தொடர்பாக, எந்தவொரு உத்தரவும் பிறப்பிக்க கூடாது' என, வருமான வரித்துறைக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2019 லோக்சபா தேர்தலின் போது, அமைச்சர் துரைமுருகன் வீட்டில், வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.
இந்நிலையில், ஒருங்கிணைந்த விசாரணை நடத்த வேண்டும் எனக்கூறி, தி.மு.க., மற்றும் அக்கட்சி அறக்கட்டளைக்கு எதிரான வருமான வரி வழக்குகளின் விசாரணையையும், துரைமுருகன் தொடர்பான வழக்கு விசாரணையையும், வருமான வரித் துறையின் மத்திய வட்டத்துக்கு மாற்றி, வருமான வரித்துறை உத்தரவிட்டது.
இதை எதிர்த்து, தி.மு.க., மற்றும் தி.மு.க., அறக்கட்டளை சார்பில், தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை விசாரித்த, சென்னை உயர் நீதிமன்றம், மத்திய வட்டத்துக்கு விசாரணையை மாற்றி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தது.
இதை எதிர்த்து, வருமான வரித்துறை தரப்பில் தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்கு, தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வு முன், விசாரணைக்கு வந்தது.
அப்போது, தி.மு.க., மற்றும் தி.மு.க., அறக்கட்டளை சார்பில், மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், வழக்கறிஞர் ரிச்சர்டு வில்சன் ஆஜராகினர்.
'வருமானவரி சட்ட நடைமுறைகளை பின்பற்றாமல், 2021 சட்டசபை தேர்தலுக்கு முன், அவசர அவசரமாக மாற்றி உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. கட்சி பொதுச்செயலரின் வருமான வரி கணக்கு வேறு, தி.மு.க.,வின் வருமான வரி கணக்கு வேறு. எனவே, இரண்டையும் வருமான வரித்துறையின் மத்திய வட்டம் விசாரிக்கக்கூடாது' என்றனர்.
வருமான வரித்துறை தரப்பில், கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல். சுந்தரேசன், வழக்கறிஞர் ஏ.பி. ஸ்ரீனிவாஸ் ஆகியோர், 'சிறந்த ஒருங்கிணைப்புக்காக, வழக்குகளை மையப்படுத்தும் அதிகாரம் வருமான வரித்துறைக்கு உள்ளது' என்றனர்.
இதையடுத்து நீதிபதிகள், இந்த மனுவுக்கு பதிலளிக்கும்படி, தி.மு.க., அறக்கட்டளைக்கு உத்தரவிட்டு, அக்., 28ம் தேதிக்கு விசாரணையை தள்ளி வைத்தனர்.
அதுவரை, தி.மு.க., அறக்கட்டளை தொடர்பான வருமான வரி வழக்கில், எந்த உத்தரவும் பிறப்பிக்க கூடாது என, வருமான வரித்துறைக்கு உத்தரவிட்டனர்.