இது உங்கள் இடம்: வள்ளுவர் பற்றி வாயை திறக்காதீர்கள்!
இது உங்கள் இடம்: வள்ளுவர் பற்றி வாயை திறக்காதீர்கள்!
UPDATED : ஜன 22, 2024 03:23 AM
ADDED : ஜன 22, 2024 01:24 AM

எஸ்.ராமகிருஷ்ணன். கே.கே.புதுார், கோவை மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
திருவள்ளுவர், 'பாரத சனாதன தர்மத்தின் பிரகாசமான துறவி' என்று, கவர்னர் ரவி உயர்வாக கூறியது, திராவிட செம்மல்களை கொதிப்படைய வைத்துள்ளது. இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை.
திருக்குறளின் மேன்மையை, பிரதமர் மோடி, கவர்னர் ரவி போன்றோர் அறிந்து வைத்திருக்கும் அளவிற்கு, திராவிடச் செம்மல்கள் அறிந்திருப்பரா என்பது சந்தேகமே!
பிரதமர் மோடி, திருக்குறளின் பெருமையை உலகறியச் செய்து வருகிறார்; இன்று தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள், 10 திருக்குறளையாவது அர்த்தத்துடன் சொல்வரா...?
அதிலும், திருக்குறள் மீது இவர்களது ஆசான் ஈ.வெ.ரா. எவ்வளவு மரியாதை வைத்திருந்தார் என்பது உலகமே அறியும். 2,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த வள்ளுவ பெருந்தகை, என்ன தோற்றத்தில் இருந்தார், எந்த நிறத்தில் உடையணிந்தார் என்பதெல்லாம் யாருக்கும் தெரியாது; ஆனால், அவர் ஒரு ஹிந்து சனாதனவாதி என்பதில் யாருக்கும் சந்தேகம் இல்லை.
மனித குலம் உய்ய எதை செய்ய வேண்டும், எதை செய்யக்கூடாது என்பதை வரையறுப்பது தான் சனாதனம்; இதைத்தான் வள்ளுவமும் வலியுறுத்துகிறது.
திருக்குறள் முழுக்க முழுக்க ஹிந்து தர்மத்தையே போதிக்கிறது. குறளில் ஹிந்து மதம் என்ற வார்த்தை இடம்பெறவில்லை. ஏனெனில், அவர் வாழ்ந்த காலத்தில், ஹிந்து மதம் மட்டுமே இருந்தது; ஆகையால் அதற்கு தனியான பெயர் இல்லை.
ஹிந்து மதத்திற்கே உரித்தான, 'அந்தணர், மறுபிறப்பு, ஏழ் பிறப்பு...' என, நிறைய வார்த்தைகள் குறளில் பயன்படுத்தப்பட்டுள்ளன. கடவுள் மறுப்புக் கொள்கையை கையில் பிடித்தபடி, ஊரை ஏமாற்றும் திராவிட செம்மல்களுக்கு திருக்குறள் பொருந்தாது.
ஏனெனில், முதல் அதிகாரத்தையே கடவுள் வாழ்த்துடன் தான் ஆரம்பிக்கிறார் திருவள்ளுவர்; கடவுள் இல்லை என்பவர்களுக்கு திருக்குறள் எப்படி பொருந்தும்?
ஹிந்து தர்மத்தை போதிக்கும் ஞானிகள், மகான்கள், சித்த புருஷர்கள் அனைவரும் காவி உடுத்தி இருந்தனர்; அந்த மரபில் தான் வள்ளுவருக்கு காவி உடையும், திருநீறும், ருத்திராட்சமும் அணிவிக்கப்பட்டுள்ளன.
வள்ளுவர் போதித்த இறைபக்தி, கள்ளுண்ணாமை, புலன் அடக்கம், புலால் மறுத்தல், பிறன்மனை நோக்காமை, சிற்றின்பம் சேராமை ஆகிய பண்புகள், இவர்களில் எத்தனை பேரிடம் உள்ளது? எனவே, திராவிட மாடல் ஆட்சியாளர்கள், வள்ளுவரை பற்றி வாய் திறவாமல் இருப்பது உத்தமம்!