ADDED : அக் 07, 2025 05:02 AM

சென்னை : தமிழக பா.ஜ., தலைவர் நாகேந்திரன், சென்னையில் நேற்று அளித்த பேட்டி:
முதல்வராக இருந்த கருணாநிதியின் ஊழல் வழக்குகளை மறைக்க, அவரை மிரட்டி, இலங்கைக்கு கச்சத்தீவை, அப்போதைய பிரதமர் இந்திரா வழங்கினார். இது, எப்படி முதல்வராக இருந்தவருக்கு தெரியாமல் நடந்திருக்க முடியும். கரூரில், விஜய் கட்சிக்கு கேட்ட இடத்தில் அனுமதி தரவில்லை.
அங்கு கூட்ட நெரிசலில் சிக்கி, 41 பேர் உயிரிழந்த சம்பவத்தை மடைமாற்றம் செய்ய, கச்சத்தீவு குறித்து முதல்வர் ஸ்டாலின் பேசுகிறார். இதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். மக்களின் செல்வாக்கை தி.மு.க., முழுதுமாக இழந்து விட்டது.
தேர்தல் வாக்குறுதிகளை, 20 சதவீதம் கூட நிறைவேற்றவில்லை. கச்சத்தீவை ஸ்டாலின் கேட்பது, எந்த வகையில் நியாயம். பிரதமர் மோடியின் கவனத்திற்கு, இந்த பிரச்னையை தமிழக பா.ஜ., எடுத்துச் செல்லும். கச்சத்தீவை வைத்து, ஸ்டாலின் இனிமேல் அரசியல் செய்ய வேண்டாம்.
கரூரில் சம்பவம் நடந்து இத்தனை நாட்களுக்கு பின், கமல் அங்கு சென்று, 'காவல் துறை சரியாக நடந்திருக்கிறது' என்று சொல்கிறார்.
அவர், முதல்வர் சொன்னதை அங்கு கூறியிருக்கிறார். விஜய் சம்பவ இடத்திற்கு சென்றிருந்தால், பதற்றமான சூழலில் அவர் மீதும், லத்தி சார்ஜ், தாக்குதல் நடந்திருக்காது என்று என்ன உத்தரவாதம் இருக்கிறது. 41 உயிரை பாதுகாக்க முடியவில்லை.
அவரின் உயிரை பாதுகாக்க முடியுமா? கச்சத்தீவை வைத்து இனிமேல் ஸ்டாலின் அரசியல் செய்வது நல்லதல்ல.
இவ்வாறு அவர் கூறினார்.