ADDED : ஜன 24, 2025 11:43 PM
சென்னை:''மாணவர்களின் விளையாட்டு வகுப்பை மற்ற ஆசிரியர்கள் எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும்,'' என, துணை முதல்வர் உதயநிதி தெரிவித்தார்.
மாநில அளவில், பள்ளிக்கல்வி துறை சார்பில், 'சூழல் பாதுகாப்பு அனைவருக்கும் பொறுப்பு' என்ற தலைப்பில் நடந்த, கலைத்திருவிழா போட்டியில், வெற்றி பெற்ற மாணவ - மாணவியருக்கு விருது வழங்கும் விழா, சென்னை கோட்டூர்புரத்தில் நேற்று நடந்தது. ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குனர் மதுமதி வரவேற்றார்.
விழாவில், அமைச்சர் மகேஷ் பேசுகையில்,''சூழல் பாதுகாப்பு குறித்த கலைவிழாவில், 'கேட்குதா கேட்குதா' என, மாணவ - மாணவியர் கேட்பது போல நிகழ்ச்சி அமைக்கப்பட்டிருந்தது. இதில், 10 குழந்தைகளை டில்லிக்கு அழைத்து செல்ல வேண்டும். அங்கு சென்று, மத்திய அரசிடம், எங்களுக்கு வர வேண்டிய நிதி எங்கே என, இதேபோல் 'கேட்குதா கேட்குதா' என கேட்கப் போகிறேன்,'' என்றார்.
மாணவர்களுக்கு விருது வழங்கி, துணை முதல்வர் உதயநிதி பேசியதாவது:
தமிழக மாணவர்கள் படிப்பிலும், விளையாட்டிலும், எப்போதும் சிறப்பானவர்கள். கலைத் திருவிழாவில், தமிழகம் முழுதும், 46 லட்சம் மாணவர்கள் பங்கேற்று உள்ளனர். மாணவர்களின் விளையாட்டு வகுப்பை, மற்ற ஆசிரியர்கள் எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும். வேண்டுமானால், மற்ற பாட வகுப்புகளை விளையாட்டுக்காக வழங்குங்கள். அதை பயன்படுத்தி, விளையாட்டு துறையில் இன்னும் சாதித்து காட்டுகிறோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
முதல் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை, வெற்றி பெற்ற 466 மாணவ - மாணவியருக்கு, 'கலையரசன் மற்றும் கலையரசி' விருது வழங்கப்பட்டது. பள்ளிக்கல்வி துறை செயலர் மதுமதி, அமைச்சர்கள் சுப்பிரமணியன், சேகர்பாபு, சென்னை மேயர் பிரியா உட்பட பலர் பங்கேற்றனர்.