எச்.எம்.பி.,வி தொற்று குறித்து அச்சம் வேண்டாம்; 5 நாட்களில் குணமாகிவிடும்; அமைச்சர் மா.சுப்பிரமணியன்
எச்.எம்.பி.,வி தொற்று குறித்து அச்சம் வேண்டாம்; 5 நாட்களில் குணமாகிவிடும்; அமைச்சர் மா.சுப்பிரமணியன்
ADDED : ஜன 07, 2025 12:40 PM

சென்னை: 'எச்.எம்.பி.,வி தொற்று குறித்து அச்சம் வேண்டாம். தொற்று பாதித்தால் 4 அல்லது 5 நாட்களில் குணமாகிவிடும்' என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
தமிழகத்தில் எச்.எம்.பி.வி., தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், மருத்துவ துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது: எச்.எம்.பி.வி., தொற்று பரவலை கண்காணித்து வருகிறோம். இந்த தொற்று அறிந்த உடன் உலக சுகாதார நிறுவனத்திடம் முழு தகவல்கள் பெறப்பட்டன. உலக சுகாதார நிறுவனம் பல்வேறு அறிவுறுத்தல்களை அளித்துள்ளது.
இந்த தொற்று குறித்து கண்காணிக்கும் பணியை தமிழக அரசு துவங்கி உள்ளது. 2001ம் ஆண்டில் எச்.எம்.பி.வி, தொற்று முதல் முறையாக உறுதி செய்யப்பட்டுள்ளது. மக்கள் பதற்றப்பட வேண்டாம். மாஸ்க், தனிமனித இடைவெளி ஆகியவற்றை அவசியம் பின்பற்ற வேண்டும்.
இனி வரும் காலங்களில் வைரஸ்களுடன் தான் வாழ வேண்டும் என நிபுணர்கள் கூறுகின்றனர். தொற்று வந்தால் தனிமையில் இருந்தாலே 3,4 நாட்களில் தானாகவே குணமாகிவிடும். தமிழகத்தில் எச்.எம்.பி.வி, தொற்று பாதிக்கப்பட்டவர்கள் நலமுடன் இருக்கிறார்கள். அச்சம் தேவையில்லை. மத்திய அரசின் அறிவுறுத்தலின் பேரில் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளோம்.
எச்.எம்.பி.வி., வைரஸ் வீரியம் மிக்கது அல்ல. வீரியம் குறைந்தது தான். சோப்புப் போட்டு கை கழுவுதல் உள்ளிட்டவற்றை கட்டாயம் செய்ய வேண்டும். தொற்று குறித்து அரசு கூர்ந்து கவனித்து வருகிறது. முதல்வர் தொடர்ந்து கேட்டறிந்து வருகிறார். மருது்துவமனைகளில் சிறப்பு வார்டுகள் தே வையில்லை. சளி, இருமல் இருப்பவர்கள் மாஸ்க் அணித்து செல்வது நல்லது. இவ்வாறு அவர் கூறினார்.