ஊக்கமருந்து விழிப்புணர்வு மையம் மத்திய அமைச்சரிடம் கோரிக்கை
ஊக்கமருந்து விழிப்புணர்வு மையம் மத்திய அமைச்சரிடம் கோரிக்கை
ADDED : ஜூன் 04, 2026 03:27 AM
சென்னை: 'தேசிய ஊக்கமருந்து தடுப்பு கல்வி மற்றும் விழிப்புணர்வு மையத்தை, சென்னையில் அமைக்க வேண்டும்' என, மத்திய விளையாட்டு துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவிடம், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வலியுறுத்தி உள்ளார்.
டில்லியில், மத்திய விளையாட்டு துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவிடம், அவர் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
நாகப்பட்டினம் மாவட்டத்தில், கடற்கரை விளையாட்டுகளுக்கான தேசிய முதன்மை நிலை மையம் அமைக்க வேண்டும். கோவையில், சர்வதேச தரத்திலான, உள்ளரங்க சைக்கிள் தடம் அமைக்க வேண்டும்.
புதுக்கோட்டை, துாத்துக்குடி, விழுப்புரம், திருவள்ளூர், கிருஷ்ணகிரி மாவட்டங்களில், சர்வதேச தரத்தில், 400 மீட்டர் செயற்கை ஓடு தளங்கள் அமைக்க வேண்டும்.
கோவை, செங்கல்பட்டு, திருவாரூர், திருப்பூர் மாவட்டங்களில், உலகத்தரம் வாய்ந்த நீச்சல் வளாகங்கள் அமைக்க வேண்டும்.
கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, ராணிப்பேட்டை, கடலுார் மாவட்டங்களில், பல்நோக்கு உள்ளரங்க விளையாட்டு வளாகங்கள் அமைக்க வேண்டும். தேசிய ஊக்கமருந்து தடுப்பு கழகத்துடன் இணைந்து, தேசிய ஊக்கமருந்து தடுப்பு கல்வி மற்றும் விழிப்புணர்வு மையத்தை, சென்னையில் அமைக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
