இரட்டை இலையா... இருண்ட இலையா... பழனிசாமி - பன்னீர்செல்வம் அணியினர் மோதல்
இரட்டை இலையா... இருண்ட இலையா... பழனிசாமி - பன்னீர்செல்வம் அணியினர் மோதல்
UPDATED : பிப் 08, 2024 07:39 AM
ADDED : பிப் 08, 2024 06:29 AM

மதுரை, : 'லோக்சபா தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில்தான் போட்டியிட உள்ளோம்' என முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் கூறியதற்கு பழனிசாமி அணியினர் எதிர்ப்பு தெரிவிக்க, பதிலுக்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவிக்க தேர்தல் களம் சூடுபிடிக்க துவங்கியுள்ளது.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க.,வில் இரட்டை தலைமை ஏற்பட்டு ஆட்சி தொடர்ந்தது. ஆட்சி மாற்றத்திற்கு பிறகு பழனிசாமி தலைமையிலான ஒற்றைத் தலைமைதான் வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் கொடி பிடிக்க, உட்கட்சி பூசல் ஏற்பட்டது. கட்சியில் இருந்து பன்னீர்செல்வம் நீக்கப்பட்டார். பொதுச்செயலாளராக பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்தலாம் என உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது.
இரு நாட்களுக்கு முன் மதுரையில் தன் ஆதரவாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்திய பன்னீர்செல்வம், 'பா.ஜ., கூட்டணியில் இரட்டை இலை சின்னத்தில்தான் போட்டியிடுவோம். நீதிமன்ற தீர்ப்பு தற்காலிமானது' என்றார். இதற்கு பழனிசாமி அணியினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அ.தி.மு.க., மன்னிக்காது
இதற்கிடையே அ.தி.மு.க., தகவல் தொழில்நுட்ப செயலாளரும், திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ., ராஜன்செல்லப்பாவின் மகனுமான ராஜ்சத்யன் 'எக்ஸ்' தளத்தில் 'ஏன் உங்கள் நண்பர்கள் உதயசூரியன், தாமரை சின்னத்தை ஒதுக்கவில்லையா. நீங்கள் உட்பட இரட்டை இலை சின்னத்திற்கு எதிராக நின்று சூழ்ச்சி செய்த துரோகிகள், அரசியல் அனாதைகளாகவதுதான் சரித்திரம். தி.மு.க.,வுடன் கைகோர்த்து கொண்டு இரட்டை இலைக்கு எதிராக ஓட்டளித்த உங்களை அ.தி.மு.க., ஒருபோதும் மன்னிக்காது' என தெரிவித்துள்ளார்.
சரித்திரமா, தரித்திரமா
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பன்னீர்செல்வத்தின் மகனான தேனி எம்.பி., ரவீந்திரநாத் 'எக்ஸ்' தளத்தில், 'தம்பி... கடந்த கால உண்மை வரலாற்றை மறைத்து வாய்க்கு வந்ததை உளரக்கூடாது. கட்சிக்கும், தலைமைக்கும் உங்களின் துரோகம் மிகவும் நீளமானது. அதை பட்டியலிட இடம் போதாது. உண்மையான இரட்டை இலை என்பது எம்.ஜி.ஆர்.,ம் ஜெயலலிதாவும் தான். இன்று உங்களிடம் இருப்பது 'இருண்ட இலை'. யார் அரசியல் அனாதைகள் ஆவார்கள். யார் தலைமையில் கட்சிக்கு தரித்திரம் கிடைக்கும். யார் தலைமையில் சரித்திரம் கிடைக்கும் என்பது விரைவில்...' என குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் நெருங்கும் நேரத்தில் இரட்டை இலை சின்னத்தை வைத்து 'ஆடு புலி ஆட்டம்' ஆட பன்னீர்செல்வம், பழனிசாமி அணியினர் தயாராகி வருவதால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

