ADDED : மார் 11, 2024 04:15 AM

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், கட்டப்பனை அருகே காஞ்சியாறு கக்காட்டுகடையை சேர்ந்தவர் விஷ்ணு, 27, நிதிஷ், 31, மார்ச் 3ல் அப்பகுதி வேலாயுதன் என்பவர் ஒர்க் ஷாப்பில் திருடிய போது சிக்கினர்.
விசாரணையில், விஷ்ணுவின் தந்தை விஜயன், 57, சகோதரியின் குழந்தையை கொலை செய்து புதைத்தது தெரிந்தது. கக்காட்டுகடை பகுதியில் விஷ்ணு, நிதிஷ் ஆகியோர் வசித்த வாடகை வீட்டை போலீசார் சோதனையிட்டதில், மாந்திரீக பூஜை நடந்ததற்கான அடையாளங்கள் இருந்தன. நரபலி நடந்திருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர். நிதிஷை போலீசார் நேற்று முன்தினம் காவலில் எடுத்து விசாரித்தனர். இதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன.
பூஜை, மாந்திரீகம் செய்த நிதிஷூக்கு, விஷ்ணுவின் நட்பு ஏற்பட்டது. விஷ்ணுவின் சகோதரிக்கு கையில் ஏற்பட்ட பிரச்னையை பூஜையில் சரி செய்வதாக கூறி, அவரது குடும்பத்தில் நிதிஷ் பழகினார். நாளடைவில் விஷ்ணு குடும்பத்தினர் நிதிஷ் கட்டுப்பாட்டில் வந்தனர். விஷ்ணு சகோதரியுடன் நிதிஷூக்கு ஏற்பட்ட நெருக்கமான பழக்கத்தில், 2016ல் ஆண் குழந்தை பிறந்தது. வெளியில் தெரிந்தால் அவமானம் என கருதிய நிதிஷ், விஷ்ணு, அவரது தந்தை விஜயன் சேர்ந்து பிஞ்சு குழந்தையை மூச்சு திணறல் ஏற்படுத்தி கொலை செய்துள்ளனர்.
உடலை வீட்டின் அருகே மாட்டு கொட்டகையில் குழி தோண்டி புதைத்தனர். பின், வெவ்வேறு பகுதிகளில் வாடகை வீடுகளில் வசித்தனர். இந்நிலையில், விஷ்ணுவின் தந்தை விஜயனுடன் ஏற்பட்ட தகராறில், நிதிஷ் சுத்தியலால் அவரை அடித்து கொலை செய்துள்ளார். அவரது உடலை விஷ்ணு, அவரது தாய் சுமா உதவியுடன் கக்காட்டுகடை வாடகை வீட்டில் நிதிஷ் புதைத்ததும் விசாரணையில் தெரியவந்தது.
கக்காட்டுகடை வீட்டை போலீசார் நேற்று தோண்டிய போது, விஜயனின் உடல் மூன்றாக மடித்து அட்டை பெட்டியில் வைத்து புதைக்கப்பட்டிருந்தது. மண்டை ஓடு உள்ளிட்ட எலும்புகளை சேகரித்து கோட்டயம் மருத்துவமனைக்கு அனுப்பினர். குழந்தை புதைக்கப்பட்ட இடத்தில் போலீஸ் மோப்ப நாய் வாயிலாக ஆய்வு நடந்தது. நிதிஷ், விஷ்ணு, அவரது தாய் சுமா மீது கொலை வழக்கு பதிவு செய்தனர்.
வீட்டு பத்திரத்தை தர மறுத்த மனைவியை கொன்ற கணவன்
திருவண்ணாமலை, ராமலிங்கனார் தெருவை சேர்ந்த இரும்பு பட்டறை கூலி தொழிலாளி ரமேஷ், 47. இவரது மனைவி சுதா, 45. தம்பதிக்கு மூன்று மகள்கள். தன் பூர்வீக வீட்டை சில நாட்களுக்கு முன் ரமேஷ் விற்றார்.
அதில், ஒரு பகுதி தொகையை செலவு செய்து விட்டார். மீதி பணத்தை கணவரிடமிருந்து சண்டை போட்டு பெற்று, ஒரு வீட்டுமனை வாங்கி, சுதா தன் பெயரில் எழுதிக் கொண்டார். அதை அடகு வைக்க, நேற்று முன்தினம் இரவு, பத்திரத்தை ரமேஷ் கேட்டுள்ளார். தர மறுத்த சுதாவின் கழுத்தை நெரித்து கொன்று விட்டு தப்பி ஓடினார். ரமேஷை டவுன் போலீசார் நேற்று கைது செய்தனர்.
பெண்ணை பலாத்காரம் செய்தவர் கைது
திருச்சி மாவட்டம், திருவெறும்பூரில் வசிக்கும், 43 வயது பெண்ணுக்கும், பக்கத்து வீட்டை சேர்ந்தவர்களுக்கும் இடத் தகராறு இருந்தது. இரண்டு நாட்களுக்கு முன், அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டதில், மூன்று பெண்கள் உட்பட நான்கு பேர் சேர்ந்து, அந்தப் பெண்ணை தாக்கினர். பாதிக்கப்பட்ட பெண், ரமேஷ், 48, என்பவரை அழைத்துக் கொண்டு, திருவெறும்பூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று புகார் கொடுத்தார்.
திரும்பி வரும் போது, அந்தப் பெண்ணை காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்ற ரமேஷ், பாலியல் பலாத்காரம் செய்தார். இது குறித்து, அந்தப் பெண் கொடுத்த புகார்படி, நேற்று, திருவெறும்பூர் போலீசார் ரமேைஷ கைது செய்து, விசாரிக்கின்றனர்.
டாக்டர் போல கையெழுத்து; மோசடி செய்தவர் கைது
தேனி மாவட்டம் கம்பத்தில் அரசு டாக்டர் கையெழுத்தை போலியாக போட்டு ஆதாரை திருத்த முயன்ற தாத்தப்பன்குளத்தை சேர்ந்த தாஜூதீனை 54, போலீசார் கைது செய்தனர்.
தாஜூதீன் அரசு சான்றிதழ்கள் வாங்கித்தரும் பணிகளை செய்து வந்தார். கம்பத்தை சேர்ந்த முனீஸ்வரன், தனது ஆதாரில் முகவரியை திருத்தம் செய்ய ஆன்லைனில் விண்ணப்பித்து அதற்குரிய ஆவணத்தை 'பிரின்ட் அவுட்' எடுத்தார்.
அதில் கெஜட்டட் ரேங்க் அதிகாரி கையெழுத்து இட்டு சான்றளிக்க வேண்டும். அதற்காக தாஜூதீனை தொடர்பு கொண்டுள்ளார். அவர் அந்த சான்றிதழில் உத்தமபாளையம் அரசு மருத்துவமனையில் வேலை பார்த்து, தற்போது பெரியகுளம் அரசு மருத்துவமனையில் பணியாற்றி வரும் டாக்டர் திவ்யாவின் கையெழுத்தை போலியாக போட்டு 'ரப்பர் ஸ்டாம்ப்' வைத்து கொடுத்துள்ளார். இந்த விவகாரம் டாக்டர் திவ்யாவிற்கு தெரிந்துள்ளது. அவரது புகாரில், உத்தமபாளையம் போலீசார் தாஜூதீனை கைது செய்து விசாரிக்கின்றனர்.
400 கிலோ கஞ்சா சிக்கியது
புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் அருகே சேமன்கோட்டை இறால்பண்ணையில் இலங்கைக்கு கடத்த பதுக்கி வைக்கப்பட்ட ரூ.60 லட்சம் மதிப்பிலான 400 கிலோ கஞ்சாவை திருச்சி மத்திய நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.
பழிக்குப்பழி கொலை; இருவர் கைது
நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் அடுத்த கருப்பம்புலத்தை சேர்ந்தவர் ரவி. இவர், 2021ம் ஆண்டு உறவினர்களுக்குள் ஏற்பட்ட சொத்து தகராறில் படுகொலை செய்யப்பட்டார். அவரது உறவினர் சிவராஜா, 41, போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
சில நாட்களுக்கு முன் ஜாமினில் வந்த சிவராஜா, 41, மார்ச் 7ல் நாகப்பட்டினத்திற்கு பைக்கில் சென்றார். தேத்தாக்குடி என்ற இடத்தில் சென்ற போது, காரில் வந்த கும்பல், சிவராஜாவை வழிமறித்து, சரமாரியாக வெட்டிக்கொலை செய்து தப்பியது. பழிக்குப்பழியாக இந்த கொலை நடந்தது.
வேதாரண்யம் போலீசார் வழக்கு பதிந்தனர். தனிப்படையினர் கொலையாளிகளை தேடினர். முக்கிய குற்றவாளியான ரவியின் சகோதரர் முருகானந்தம், 52, திருவாரூர் கோர்ட்டில் சரணடைந்தார். கூலிப்படையை சேர்ந்த சேலம், சின்ன திருப்பதியை சேர்ந்த தீனதயாளன், 34, நாகப்பட்டினம் அருள்பிரகாசம், 34, ஆகியோரை, தனிப்படை போலீசார், நேற்று முன்தினம் கைது செய்தனர். கொலையில் தொடர்புடைய மேலும் சிலரை தேடி வருகின்றனர்.
மதுரை தொழிலாளி கோவையில் குத்திக்கொலை
மதுரை, தெற்கு தெருவை சேர்ந்தவர் ஜெய்கணேஷ், 33; கோவை துடியலுார், சுப்பிரமணியம்பாளையத்தில் தங்கி கூலி வேலை செய்து வந்தார். நேற்று காலை, 6:00 மணிக்கு காசிநஞ்சேகவுண்டன்புதுார் பகுதியில் நடந்து சென்ற போது, பைக்கில் வந்த மர்ம நபர் ஒருவர் ஜெய்கணேசை கத்தியால் குத்தி தப்பினார்.
படுகாயமடைந்த ஜெய்கணேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விசாரணையில், கோவை, பன்னிமடையை சேர்ந்த லாரி டிரைவர் சாமிநாதன், 42, என்பவருக்கும், ஜெய்கணேசுக்கும் முன்விரோதம் இருந்துள்ளது.
நேற்று காலை, கே.என்.ஜி.புதுார் பிரிவு அருகே உள்ள டாஸ்மாக் கடைக்கு ஜெய்கணேஷ் வந்த போது, அங்கு வந்த சாமிநாதனுக்கும், ஜெய்கணேஷுக்கும் தகராறு ஏற்பட்டது. இதில், சாமிநாதன் மறைத்து வைத்திருந்த கத்தியால், ஜெய்கணேஷை குத்தியதில் அவர் உயிரிழந்தது தெரிந்தது. தலைமறைவான சாமிநாதனை போலீசார் தேடி வருகின்றனர்.
கலெக்டருக்கு மிரட்டல்; போலி வக்கீலுக்கு 'கம்பி'
தேனி மாவட்டம், உத்தமபாளையம், நாராயணத்தேவன்பட்டி அரசு உதவி பெறும் பள்ளி தலைமை ஆசிரியர் சந்திரசேகரன். மதுரை, சம்மட்டிபுரம் ராமகிருஷ்ணன் என்பவரின் உறவினர்கள் குறித்து, சந்திரசேகரன் ஜாதி ரீதியாக வதந்தி பரப்பியதாக வந்த புகாரில், கலெக்டர் ஷஜீவனா தலைமையில் விசாரணை நடந்தது.
இந்நிலையில், கலெக்டரின் மொபைல் போன் எண்ணில் பேசிய ராமகிருஷ்ணன், தான் மதுரை உயர் நீதிமன்றத்தில் சிறப்பு அரசு வக்கீலாக பணிபுரிவதாக கூறினார். மேலும் இ - மெயிலில் அனுப்பிய புகாரை விரைந்து விசாரித்து நடவடிக்கை எடுக்க அழுத்தம் கொடுத்தார்.
மீண்டும், 'வாட்ஸாப்' செயலியில் தொடர்பு கொண்டு, கலெக்டர் பணிக்கு இடையூறு செய்தார். புகார் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால், உயர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டி இருக்கும் என, குறுந்தகவல் அனுப்பி மிரட்டல் விடுத்தார்.
இது தொடர்பாக, கலெக்டரின் நேர்முக உதவியாளர் சிந்து எஸ்.பி., சிவபிரசாத்திடம் புகார் அளித்தார். எஸ்.பி., உத்தரவில், தேனி போலீசார் விசாரித்து, ராமகிருஷ்ணனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
போலீசார் கூறியதாவது: ராமகிருஷ்ணன் சட்டம் படிக்கவில்லை. கேரளாவில் டோம்னிக் ஜோசப் என்ற பெயரில் படித்து, அங்கு பார் கவுன்சிலில் பதிவு செய்துள்ளதாக தெரிவித்தார். அவர் மீது திருப்பூர், கோவை, தஞ்சாவூர், ராமநாதபுரம் மாவட்டங்களில், 20க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.
லாலுவின் உதவியாளர் கைது
மணல் கொள்ளை வழக்கில் பீஹார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவின் நெருங்கிய உதவியாளர் சுபாஷ் யாதவ் அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்டார்.
மதுபான வியாபாரி பட்டப்பகலில் சுட்டுக் கொலை
ஹரியானாவின் சோனாபட் பகுதியைச் சேர்ந்த மதுபான வியாபாரி சுந்தர் மாலிக், 36. இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ள நிலையில், சமீபத்தில் சிறையில் இருந்து ஜாமினில் வந்தார். முர்தல் பகுதியில் சாலையோர உணவகமான தாபாவின் வாசலில் நேற்று காலை காரில் சுந்தர் மாலிக் அமர்ந்திருந்தார். அப்போது அங்கு வந்த இரு மர்ம நபர்கள், காரில் இருந்த அவரை வெளியே இழுத்துபோட்டு துப்பாக்கியால் சுட்டனர்.
இதில் நிலைகுலைந்த சுந்தர், தப்பியோட முயன்ற நிலையில், இருவரும் சேர்ந்து அவரை தொடர்ந்து சரமாரியாக சுட்டனர். இதில், சம்பவ இடத்திலேயே சுந்தர் உயிரிழந்தார். மர்ம நபர்கள் தப்பியோடியதை அடுத்து துப்பாக்கிச் சூடு குறித்து தாபா உரிமையாளர்கள் போலீசில் புகார் அளித்தனர். இதையடுத்து, அங்கு வந்த போலீசார் சுந்தர் உடலை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
300 பள்ளி மாணவர்கள் கடத்தல்
நைஜீரியாவில், கடூனா மாகாணத்தில் உள்ள குரிகா நகரில் பள்ளி ஒன்றில் புகுந்த கும்பல், அங்கிருந்த மாணவர்களை கடத்தி சென்றது. இரு சக்கர வாகனங்களில் வந்த ஆயுதமேந்திய கும்பல், வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டது. பின், அங்கிருந்த ஆசிரியர்கள், ஊழியர்களை மிரட்டி, 7 முதல் 18 வரையிலான 70க்கும் மேற்பட்ட மாணவர்களை கடத்திச் சென்றது. இந்த சம்பவத்தின் போது, ஆசிரியர்கள் மற்றும் 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.
அண்டை மாகாணங்களான சோகோடோ, போர்னோ ஆகியவற்றில் இருந்து, இரண்டு நாட்களுக்கு முன், 220 மாணவர்கள் கடத்தப்பட்டனர். ஒரே வாரத்தில் மூன்று பள்ளிகளில் இருந்து 300 மாணவர்கள் கடத்தப்பட்டது அந்நாட்டு மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த கடத்தல் சம்பவத்துக்கு எந்த அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை. மாணவர்களை மீட்கும் முயற்சியில் அந்நாட்டு ராணுவம் ஈடுபட்டுள்ளது.

