sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

திருவள்ளூரில் நள்ளிரவில் இரட்டை கொலை; கஞ்சா போதை கும்பல் வெறியாட்டம்

/

திருவள்ளூரில் நள்ளிரவில் இரட்டை கொலை; கஞ்சா போதை கும்பல் வெறியாட்டம்

திருவள்ளூரில் நள்ளிரவில் இரட்டை கொலை; கஞ்சா போதை கும்பல் வெறியாட்டம்

திருவள்ளூரில் நள்ளிரவில் இரட்டை கொலை; கஞ்சா போதை கும்பல் வெறியாட்டம்

14


ADDED : ஜன 18, 2026 01:30 AM

Google News

ADDED : ஜன 18, 2026 01:30 AM

14


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர்: நண்பர்கள் சேர்ந்து பொங்கல் பண்டிகையை கொண்டாட ஆந்திரா சென்று திரும்புகையில், திருவள்ளூரில் வங்கி ஊழியர் உட்பட வாலிபர்கள் இருவரை, கஞ்சா போதை கும்பல் கல்லால் அடித்து கொன்ற சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர், மணவாளநகர் ஒண்டிக்குப்பத்தைச் சேர்ந்தவர் பார்த்திபன், 32. இவர், செவ்வாப்பேட்டை, பல்லவ ன் வங்கியில் பணிபுரிந்தார். இவர் நண்பர்களான கேசவமூர்த்தி, 25, சுகுமார், 31 ஆகியோருடன், பொங்கல் பண்டிகையை கொண்டாட, ஆந்திர மாநிலம், கோனே நீர்வீழ்ச்சிக்கு நேற்று முன்தினம் சென்றார்.

இரவு 7:00 மணியளவில், மணவாளநகர் வந்து, பூந்தமல்லி நெடுஞ்சாலையில் ராகவேந்திரா பேக்கரி அருகே நின்று பேசிக் கொண்டிருந்தனர்.

அப்போது, அங்கு பைக்கில் வந்த கஞ்சா போதையில் வந்த இருவர், இவர்கள் மீது மோதுவது போல் வேகமாக வந்துள்ளனர். இதை பார்த்த பார்த்திபன் உள்ளிட்டோர், 'ஏன் இடிப்பது போல் வேகமாக வருகிறீர்கள்' என கேட்டனர். இதனால் ஏற்பட்ட வாக்குவாதம், இருதரப்பினருக்கும் இடையே கைகலப்பில் முடிந்தது. இதையடுத்து, அவர்கள் அங்கிருந்து சென்றனர்.

இந்த நிலையில், பார்த்திபன் தன் நண்பர்களுடன் அப்பகுதியில் உள்ள ஹோட்டலில் சாப்பிட்டு முடித்து, இரவு 10:30 மணியளவில் வெளியில் வந்தார்.

அப்போது, அவர்களுடன் தகராறில் ஈடுபட்ட இருவர், மேலும் இருவர் வந்து பார்த்திபன் உள்ளிட்ட மூவரிடம் வீண் தகராறில் ஈடுபட்டு, கற்களை எடுத்து கடுமையாக தாக்கினர்.

எதிர்பாராத தாக்குதலில் நிலைகுலைந்த பார்த்திபன், தலையில் பலத்த காயங்களுடன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்ற இருவரும் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடினர். இதை கண்ட போதை கும்பல், அங்கிருந்து தப்பியது.

அங்கிருந்த சிலர், உயிருக்கு போராடிய சுகுமார், கேசவமூர்த்தி ஆகிய இருவரையும், திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, சுகுமார் உயிரிழந்தார். கேசவமூர்த்தி ஆபத்தான நிலையில், சிகிச்சை பெற்று வருகிறார்.

இறந்த பார்த்திபனுக்கு, மனைவி மற்றும் 2 வயதில் குழந்தை உள்ளது. சுகுமாரின் மனைவி 8 மாதம் கர்ப்பிணியாக உள்ளார். இந்த நிலையில், இருவரும் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம், திருவள்ளூர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மணவாளநகர் போலீசார் விரைந்து வந்து, பார்த்திபன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக, திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

'மாவுக்கட்டு'


திருவள்ளூர் எஸ்.பி., விவேகானந்தா சுக்லா உத்தரவின்படி, இரட்டைக் கொலை வழக்கில் குற்றவாளிகளை பிடிக்க மூன்று தனிப்படை அமைக்கப்பட்டது. போலீசாரின் விசாரணையில், கொலை வெறியாட்டத்தில் ஈடுபட்டது, அதே பகுதியைச் சேர்ந்த ஜவகர், 23, வினோத்குமார், 36, ஜோதிஷ், 34, நீலகண்டன், 30, என தெரிய வந்தது.

அதேநேரம், தகவலறிந்து, ஒண்டிக்குப்பம் பகுதியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் நேற்று பூந்தமல்லி - திருவள்ளூர் நெடுஞ்சாலையில், மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை அடுத்து, கலைந்து சென்றனர்.

இந்த நிலையில், கொலை குற்றவாளிகள் மணவாளநகரில் பதுங்கி இருப்பது போலீசாருக்கு தெரிய வந்தது. போலீசார் அவர்களை சுற்றி வளைத்தனர். அப்போது தப்பியோட முயன்ற நீலகண்டன், மதில் சுவர் ஏறி குதிக்கையில் வலது காலிலும், ஜவகருக்கு வலது கையிலும் எலும்பு முறிவு ஏற்பட்டது.

இதையடுத்து, நால்வரையும் போலீசார், திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். காயமடைந்த இருவருக்கும், 'மாவுக்கட்டு' போட்டு, விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் ஏற்கனவே, கஞ்சா போதையால் பல்வேறு குற்றச் சம்பவங்கள் தொடர்கதையாகி வரும் நிலையில், இரட்டை கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

'கஞ்சா நுழைவாயிலாக திருவள்ளூர் உள்ளது'


திருவள்ளூர் மாவட்டத்தில், கஞ்சா போதையில் இரு இளைஞர்கள் கல்லால் அடித்து கொல்லப்பட்டதற்கு, தி.மு.க., அரசே பொறுப்பு என, பா.ம.க., தலைவர் அன்புமணி குற்றம் சாட்டியுள்ளார்.

அவரது அறிக்கை:

திருவள்ளூர் மாவட்டம், ஒண்டிக்குப்பத்தில், கஞ்சா போதையில் நான்கு பேர், கற்களால் அடித்து இருவரை கொலை செய்துள்ளனர். இந்த கொடூரத்திற்கு, கஞ்சா போதையே காரணம். திருவள்ளூர் மாவட்டம், தமிழகத்தின் கஞ்சா நுழைவாயிலாக உள்ளது. தி.மு.க., ஆட்சிக்கு வந்த நாளில் இருந்தே, கஞ்சா உள்ளிட்ட அனைத்து போதை பொருள்களும் தடையில்லாமல் தமிழகத்தில் புழக்கத்தில் உள்ளன. இரு இளைஞர்களின் படுகொலைக்கு பொறுப்பேற்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

இருளர் காலனியில் ஆசாமிகள் அராஜகம்


திருத்தணி அடுத்த தாழவேடு இருளர் காலனிக்கு, நேற்று முன்தினம் நள்ளிரவு 11:00 மணியளவில், இரண்டு இருசக்கர வாகனங்களில் ஆறு வாலிபர்கள் வந்தனர். அனைவரும் கஞ்சா போதையில் இருந்துள்ளனர். இவர்கள் இருளர் இன மக்களின் வீடுகள், தெரு குழாய் மற்றும் மின் விளக்குகளை அடித்து நொறுக்கினர்.

மேலும், சத்தம் கேட்டு வெளியே வந்த பெண்கள் மற்றும் பொதுமக்களை ஆபாசமான வார்த்தைகளில் பேசினர். இதை தட்டிக்கேட்ட ராமசாமி, 50, என்பவரை, போதை வாலிபர்கள் இரும்பு ராடால் தாக்கி தப்பினர். பலத்த காயமடைந்த ராமசாமி, திருத்தணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக, சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். தப்பிய கும்பலை பிடிக்க, இரு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

அரசியல் பின்புலம்
கொடூர தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட நீலகண்டன் பகுஜன் சமாஜ் கட்சியில் உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், அவர் மீது மணவாளநகர் காவல் நிலையத்தில், ஏற்கனவே குற்ற வழக்குகள் உள்ளன. மேலும், ஜவகர் த.வெ.க., பிரமுகர் எனவும் கூறப்படுகிறது.



கஞ்சா போதையா...?
காவல்துறை மழுப்பல் மணவாளநகரில் வாலிபர் இருவர், போதை கும்பலால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து, திருவள்ளூர் மாவட்ட காவல் துறையினரிடம் கேட்டபோது, 'சம்பவம் குறித்து விசாரணை நடத்தி, நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மது போதையில் இருந்தனரா அல்லது கஞ்சா போதையா என்பது, மருத்துவ பரிசோதனை அறிக்கைக்கு பின்னரே தெரிய வரும்' என, மழுப்பலாக தெரிவித்தனர்.








      Dinamalar
      Follow us