டவுட் தனபாலு: பா.ஜ.,வுடன் தான் கூட்டணி: தேனி தொகுதி எம்.பி., ரவீந்திரநாத்
டவுட் தனபாலு: பா.ஜ.,வுடன் தான் கூட்டணி: தேனி தொகுதி எம்.பி., ரவீந்திரநாத்
ADDED : மார் 02, 2024 01:06 AM

அ.தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்ட, தேனி தொகுதி எம்.பி., ரவீந்திரநாத்: பா.ஜ.,வுடன் தான் கூட்டணி; அதில் மாற்றம் இல்லை. இரு கட்சிகளின் மேலிடம், தொகுதி பற்றி பேசி முடிவெடுப்பர். அண்ணாமலை வெற்றிகரமாக நடைபயணத்தை முடித்துள்ளார். தேர்தலில் இதன் பயன் தெரியும். தாமரை சின்னத்தில் நிற்க வேண்டும் என, யாரும் கட்டாயப்படுத்தவில்லை; அனைத்தும் வதந்தி.
டவுட் தனபாலு: இரட்டை இலை சின்னம் கிடைக்காத பட்சத்தில், தனியாக ஒரு சின்னத்தை வாங்கி, அதுல ஜெயிச்சிட முடியும்னு, 'டவுட்' இல்லாம நம்புறீங்களா... அவ்வளவு பெரிய, 'ரிஸ்க்' எடுக்கிறதுக்கு பதிலாக, தாமரையில ஐக்கியமாவது தான், உங்க அரசியல் எதிர்காலத்துக்கு பாதுகாப்பாக இருக்கும்!
தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி: உண்மையில் பா.ஜ.,வின் மாநில அணி அ.தி.மு.க., தான். மீண்டும் பா.ஜ., ஆட்சிக்கு வந்தால், 'ஒரே நாடு; ஒரே தேர்தல், ஒரே உடை; ஒரே கட்சி' என்று வந்து விடும். ஏன் இணையதளம் கூட இருக்காது. கடந்த தேர்தலுக்கு, 'கோ பேக் மோடி' டிரெண்டிங் ஆனது போன்று இந்த தேர்தலில், 'கெட் அவுட் மோடி' என்று தி.மு.க.,வினர் பரப்ப வேண்டும்.
டவுட் தனபாலு: கடந்த தேர்தலில், 'கோ பேக் மோடி' என நீங்க செய்த பிரசாரத்தால், 303 தொகுதிகள்ல மோடி ஜெயிச்சாரு... இப்ப, 'கெட் அவுட் மோடி' என பிரசாரம் செய்ய இருப்பதால், 400 தொகுதிகள்ல அவர் ஜெயிக்க வாய்ப்பு ஏற்படுத்தி தர்றீங்களோ என்ற, 'டவுட்'தான் வருது!
சிவகங்கை காங்., - எம்.பி.,கார்த்தி: திராவிட கட்சிகள் தமிழகத்தில் நிலைத்து நிற்கின்றன. அதனால், அதை யாரும் எளிதில் அசைத்துவிட முடியாது. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா பற்றி பேசினால் பா.ஜ., பக்கம் அ.தி.மு.க.,வினர் வந்துவிடுவர் என்ற நம்பிக்கையில் மோடி பேசுகிறார். அ.தி.மு.க., தொண்டர்களும், வாக்காளர்களும் இரட்டை இலை எங்கு உள்ளதோ, அங்கு தான் ஓட்டளிப்பர்.
டவுட் தனபாலு: திராவிட கட்சிகள் நிலைத்து நிற்பது, அவங்களுக்கு முக்கியமோ, இல்லையோ உங்களுக்கு ரொம்பவே முக்கியம்... அப்ப தானே, அவங்க தோளில் சவாரி செய்து, உங்க கட்சியினர் எம்.பி., மத்திய அமைச்சர் பதவிகளை அனுபவிக்க முடியும் என்பதில், 'டவுட்'டே இல்லை!

